
பதான் வெற்றியை ரூ.5 கோடி வாட்ச் உடன் கொண்டாடும் ஷாருக் படத்தை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
ரூ.5 லட்சத்துக்கான வாட்ச் ஒன்று அண்மையில் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ’ரபேல்’ வாட்சை முன்வைத்து பெரும் அரசியல் களரியும் தமிழகத்தில் நடந்தேறியது. இம்மாதிரி ரூ.5 லட்சம் அல்ல ரூ.5 கோடி வாட்ச் ஒன்றை பாலிவுட் பாஷாவான ஷாருக் கான் அணிந்திருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டும் வருகிறது.
4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாருக் கான் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படமாக, பதான் அண்மையில் வெளியானது. திரையரங்கை அடைவதற்கு முன்னரே பல சச்சரவுகள் மற்றும் எதிர்ப்புகளை சந்தித்தபோதும், அவற்றையே விளம்பரமாக்கி பெருவெற்றி கண்டிருக்கிறது.
ஷாருக்கானுக்கான தனிப்பட்ட வெற்றியாக மட்டுமன்றி பாலிவுட்டின் வெற்றியாகவும் பதான் பார்க்கப்படுகிறது. கரோனா முடக்க பாதிப்பிலிருந்து இந்தியாவின் இதர மொழி திரையுலங்கள் மீண்டெழுந்தபோதும், பாலிவுட் தடுமாறியே வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமிர்கான் முதல் அக்ஷய்குமார் வரையிலான இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டன. பான் இந்தியா வெளியீடாக பாலிவுட்டில் வெளியான தென்னக திரைப்படங்கள் இந்தி சினிமா வசூலை பதம் பார்த்தன. இவற்றிலிருந்து பாலிவுட்டை மீட்டு நிறுத்தியிருக்கிறது பதான் வெற்றி.
பதான் வெற்றிக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஷாருக் கானின் பெருமித அடையாளங்களின் ஒன்றாக, அவரது மணிக்கட்டில் அலங்கரித்திருக்கும் அடர் நீலநிற வாட்ச் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அதன் விஷேச அம்சங்கள் என்ன என்பதோடு, வாட்ச்சின் விலையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது.
Audemars Piguet நிறுவனத்தின் Royal Oak 26579CS ரக வாட்ச் ஒன்றை அணிந்தபடி, பதான் புரமோஷன், ஊடக பேட்டிகள் முதல் தீபிகா படுகோன் உடனான புதிய விளம்பர நிகழ்ச்சி வரை ஷாருக் பங்கேற்று வருகிறார். எனவே மேற்படி வாட்ச், ஷாருக்கின் அன்புக்குரியவர் பரிசாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த வாட்ச் குறித்தான தகவல்களை தேடி எடுத்தவர்கள் அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.98 கோடி என்கிறார்கள். இந்தியர் பெரும்பாலானோரின் வாழ்நாள் வருமானத்தைவிட அதிக மதிப்பு கொண்ட வாட்ச், ஷாருக்கின் ஆகிருதிக்கும் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்கிறார்கள். வாட்ச் மட்டுமல்ல, ஷாருக்கின் இதர அடையாளங்கள் பலவும் வாய்பிளக்க வைப்பன.
கடல் பார்த்து அமைத்திருக்கும் ஷாருக்கின் விருப்பத்துக்குரிய மும்பை ’மன்னத்’ வீட்டின் மதிப்பு ரூ.200 கோடிக்கும் மேல். இதே போன்று விலைமதிப்பான சொகுசு வீடு ஒன்றை டெல்லியிலும் வைத்திருக்கிறார் ஷாருக். இது தவிர கார் பிரியரான ஷாருக் வசம் பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட உலகின் விலை அதிகமான கார்கள் அனைத்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.