இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதா? என்ன சொல்கிறார் சமந்தா?

இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதா? என்ன சொல்கிறார் சமந்தா?

புகழ்பெற்ற சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம், இன்றைய இளைஞர்களின் ஆதர்சமாக உள்ளது. தங்கள் திறமைகளை வெளிக்காட்டி, தொழில் ஈட்டும் தளமாகவும் இன்ஸ்டாகிராமைப் பலர் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதில் திரைப்பிரபலங்களும் விதிவிலக்கல்ல. தென்னிந்திய நடிகைகளில் அதிக அளவில் - கிட்டத்தட்ட 24 மில்லியனுக்கும் அதிகமான - ஃபாலோயர்களை நடிகை சமந்தா பெற்றிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும் சமந்தாவின் ஃபோட்டோஷூட்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அத்துடன் அவர் பல பிராண்டுகளுடன் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரமும் செய்து வருகிறார். இதன் மூலம் கணிசமான வருவாயும் அவருக்குக் கிடைக்கிறது. இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்மந்தமில்லாத வேறொரு நபரின் புகைப்படம் வெளியானதால் அவரது பக்கம் முடக்கப்பட்டதா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து சமந்தாவின் மேலாளர் சேஷன் இதற்கு விளக்கம் கொடுத்தார். ‘சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் தவறுதலாக வேறொருவரின் புகைப்படம் பதிவேற்றப்பட்டுவிட்டது. இந்தத் தொழில்நுட்ப கோளாறைச் சரி செய்வதற்கு நாங்கள் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற தவறுதலான பதிவால் உங்களை குழப்பியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்’ என தனது பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் சமந்தா தனது மேலாளரின் பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபகிர்வு செய்து ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in