
திரையரங்குகளில் தான் தாக்கப்பட்டதாக பரவும் செய்திகளுக்கு யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், யூடியூப் திரைப்பட விமர்சனங்களுக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் அவர் ‘ஆண்டி இந்தியன்’ என்ற படம் மூலமாக இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். இவரது திரைப்பட விமர்சனங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் தனி நபர் தாக்குதலாக இவர் விமர்சனங்களில் பேசுவதை பலரும் விரும்பவில்லை என்பதை இணையத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. இந்த படம் குறித்தும், அஜித்தின் தோற்றம் குறித்தும் மாறன் பேசிய வார்த்தைகள் உருவ கேலியாக அமைந்தது.
இதனை ஆட்சேபித்து அஜித் ரசிகர்கள் மாறனுக்கு எதிராக தங்கள் பதிவுகளை இணையத்தில் பதிவு செய்து வந்தனர். மேலும், மாறனின் இந்த பேச்சை கண்டித்து நடிகர் ஆரி மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவரும் திரைப்பட விழா மேடையில் பேசியிருந்தனர். மேலும், ‘எதற்கும் துணிந்தவன்’ பட இயக்குநர் பாண்டிராஜிம் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை ஆட்சேபித்து பேட்டி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் மாறன் திரைப்படம் பார்க்க மாறன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு அவர் தாக்கப்பட்டாரா என்ற ரீதியில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு மாறனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், "தியேட்டரில் என்ன ஆகும்? தியேட்டர்ன்னா நாலு பேர் படம் பார்க்க வருவார்கள், படம் முடிந்ததும் வெளியே போவார்கள். அதை எதற்கு மறைந்திருந்து புகைப்படம் எடுக்க வேண்டும்? நேரில் வந்து எடுக்க வேண்டியது தானே?. அப்படி மறைந்திருந்து புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் ஷேர் செய்யும் அளவுக்கு நான் செலிபிரிட்டி கிடையாது. எப்படியோ, எனக்கு வைரல் பப்ளிசிட்டி கொடுத்த அந்த முகம் தெரியாத தம்பிக்கு நன்றி!'' என கூறியுள்ளார்.