விஜய சேதுபதியின் புதிய திரைப்படம், பெயர் வைக்காது படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறது.
விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பொன்ராம் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார். இவர் 2018ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். உடன் புகழ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
’விஜேஎஸ் 46’ என்ற டம்மி தலைப்பில் தயாரான இந்த திரைப்படம், சத்தமின்றி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. ’சேதுபதி’ திரைப்படத்துக்கு பின்னர் இந்த படத்துக்காக மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பெருநகர போலீஸாக அல்லாது ஊர்ப்புறத்து போலீஸார் பின்னணியில் கதையில் ஆக்ஷன், அழுத்தமான சென்டிமெண்ட் ஆகியவற்றுடன் பொன்ராம் பாணியிலான நகைச்சுவையும் சேர்ந்துள்ளது.
ரஜினி முருகன், சீம ராஜா, எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட படங்களின் இயக்குநரான பொன்ராம், விஜய் சேதுபதியின் இந்த புதிய திரைபடத்தினை இயக்கி உள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதிய விஜய் சேதுபதி திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியாகும் எனத் தெரிகிறது.