கதாபாத்திரங்களால் வாழும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்!

’வியட்நாம் வீடு’ படத்தில் சிவாஜி, பத்மினி
’வியட்நாம் வீடு’ படத்தில் சிவாஜி, பத்மினி

சினிமாக்களில், ஒரு நடிகரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே இல்லை. பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், கதையை ஒருவர் எழுதியிருப்பார். வசனத்தை ஒருவர் எழுதியிருப்பார். அதன் பின்னர், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், பாலசந்தர், பாக்யராஜ் என அடுத்தடுத்து வந்த இயக்குநர்கள் அவர்களே கதை, வசனம் எழுதினார்கள். எழுபதுகளில், ‘கதை நல்லாருக்கு’ என்று பல பாராட்டுகளைப் பெற்று, ‘வசனமெல்லாம் பளிச் பளிச்சுன்னு இருக்குய்யா’ என்று பல கைத்தட்டல்களைப் பெற்று, அந்தக் கதாசிரியரை, வசனகர்த்தாவை ‘யார் யார்’ என விசாரித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர் எந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கார் என்பதை அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அடைமொழியுடன் சொன்னால் போதும்... தடக்கென எல்லோருக்கும் புரிந்துவிடும். அவர் பெயர்- வியட்நாம் வீடு சுந்தரம்.

சிறுவயதிலிருந்தே எழுதுவதில் ஈடுபாடு. ஆனால் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே! திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தார் சுந்தரம். டன்லப் டயர் கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலை பார்த்த நேரம் போக, மீதமுள்ள நேரத்தில், ஒரு கதையை நாடகமாக எழுதினார். அந்த நாடகப் பேப்பரைத் தூக்கிக்கொண்டு நடையாய் நடந்தார். எல்லோரும் ‘நல்லாருக்கு’ என்று சொன்னார்களே தவிர, ‘செய்வோம்’ என்று எவரும் சொல்லவில்லை.

62-ம் ஆண்டு. ஒருவழியாக நாடகம் அரங்கேறியது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நாடக வெற்றிவிழாவுக்கு வந்த எம்ஜிஆர், நாடகத்தை முழுவதுமாகப் பார்த்தார். விழாவில் பேசும்போது, “இந்த நாடகத்தை எழுதின பையன், ஒருகாலத்துல பெரியாளா வருவான்” என்று பாராட்டினார். சுந்தரத்துக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஆனால், சிந்தனைக் குதிரைகளுக்கு றெக்கைகள் முளைத்தன. எழுதிக்கொண்டே இருந்தார்.

அப்படி எழுதிய நாடகம் ஒன்றை, ஒய்.ஜி.பார்த்தசாரதியிடம் கொடுத்தார். படித்துப் பார்த்த ஒய்.ஜி.பி, சுந்தரத்தை அழைத்தார். “கதை ரொம்ப நல்லாருக்குய்யா. இந்தக் கேரக்டரை சிவாஜி பண்ணினாத்தான் நல்லாருக்கும். அவரைப் புடி” என்று சொல்லியனுப்பினார். சுந்தரம் வெலவெலத்துப்போனார். ‘சிவாஜியையா... நம் நாடகத்துக்கா? அவரை எப்படிச் சந்திப்பது, சிவாஜியைத் தெரிந்தவர்கள் நமக்கும் தெரிந்தவர்கள் என்று எவரேனும் இருந்தால் பரவாயில்லை. ஆனால் யாரும் இல்லையே?’ என்று யோசித்து வாட்டமாகிப்போனார் சுந்தரம்.

அந்தச் சமயத்தில்தான் சுந்தரத்தின் வீட்டுக்கு அவருடைய தங்கை வர, அண்ணாவின் சோக முகத்தைப் பார்த்துவிட்டு விசாரித்தார். அவர், தான் செய்துவைத்திருக்கும் கதை மொத்தத்தையும் சொன்னார். “ரொம்ப நல்லாருக்கேண்ணா கதை” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அப்படிச் சென்ற தங்கை, அவருடைய பக்கத்து வீட்டு மாமியிடம், “என் அண்ணா ஒரு கதை பண்ணிருக்காரு. கதையக் கேட்டுட்டு சிவாஜி நடிச்சாத்தான் நல்லாருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க” என்று சொன்னவர், அப்படியே அந்தக் கதையையும் விவரித்தார்.

வியட்நாம் வீடு சுந்தரம்
வியட்நாம் வீடு சுந்தரம்

கதையைக் கேட்ட மாமி, தன் கணவரிடம் சொன்னார். ‘அட!’ என்று வியந்தார். மறுநாளே நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் அந்தக் கதையைச் சொன்னார். சிவாஜிக்கு அந்த மனிதர்தான் ஆடிட்டர். கதையைக் கேட்ட சிவாஜி, புருவம் உயர்த்தினார். கண்கள் மூடினார். “அந்தத் தம்பியை வரச்சொல்லு” என்றார். விஷயத்தை ஆடிட்டர் மாமியிடம் சொல்ல, மாமி தங்கையிடம் சொல்ல, தங்கை ஓடிவந்து அண்ணன் சுந்தரத்திடம் சொல்ல, ஒரு பக்கம் சந்தோஷத்திலும் இன்னொரு பக்கம் பயத்திலுமாக மனிதர் நடுங்கிப் போனார்.

அதேசமயம் சுந்தரத்துக்கு முக்கியமான கவலையும் வந்தது. சோர்ந்துபோனார். காரணம், டன்லப் கம்பெனி சீருடையைத் தவிர, போட்டுக்கொள்ள நல்ல சட்டையே இல்லை அவரிடம். போட்டுக்கொள்ள சட்டைகள் பல இருந்தும் கதையைக் காப்பி அடிக்கிற உலகில், சொந்தமாகக் கதை எழுதி வைத்திருக்கும் சுந்தரம், நண்பரிடம் இரவலாகச் சட்டையை வாங்கிப் போட்டுக்கொண்டார். சிம்மக்குரலோனைச் சந்தித்தார். மீண்டும் தன் கதையை விரிவாகவும் அழகாகவும் கோர்வையாகவும் சொன்னார்.

”இன்னும் நல்லா டெவலப் பண்ணு. நீ என் கூடவே இரு. நல்லா எழுதிருக்கே. இன்னும் நல்லா எழுது” என்று சுந்தரத்தை உடன் வைத்துக்கொண்டார் சிவாஜி. இன்னும்... இன்னும்... என கதையை மெருகேற்றினார் சுந்தரம். சிவாஜி போகிற ஊருக்கெல்லாம் சென்று, தனியே அமர்ந்து அன்றைக்கு எழுதியதை அன்று படப்பிடிப்பு முடிந்து வந்ததும் அவரிடம் காட்டினார்.

அந்தக் கதை ஒருநாள் நாடகமாயிற்று. அரங்கேறியது. சிவாஜி நடித்தார். முதல் நாள் மிகுந்த வரவேற்பு. மறுநாள் வரவேற்பு இரட்டிப்பானது. அடுத்தடுத்த நாட்கள்... கொட்டகை கொள்ளாத கூட்டம். பார்த்தவர்களே திரும்பத்திரும்ப வந்து பார்த்தார்கள். அந்த நாடகத்தின் விழா... சிவாஜிக்கு மாலைகள் குவிந்தன. எல்லா மாலைகளையும் தன் தோளிலிருந்து கழற்றி, “டேய் சுந்தரா, இங்கே வாடா” என்று அழைத்து, அத்தனை மாலைகளையும் அவருக்குப் போட்டார். “இவன்தான் இந்த டிராமாவை எழுதினவன். இவனுக்குத்தான் இத்தனை மாலைகளும் போகணும். இவன் பேரு சுந்தரம். இன்னிலேருந்து இவன் வியட்நாம் வீடு சுந்தரம்’’ என்று அப்படியே அணைத்துக்கொண்டு வாழ்த்தினார். சுந்தரம்... வியட்நாம் வீடு சுந்தரம் ஆனது இப்படித்தான்! அந்த நாடகம்... ‘வியட்நாம் வீடு’ என்பதைச் சொல்லாமலே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

சில வருடங்கள் கழித்து, “டேய் சுந்தரா, இதை நாம படமா எடுக்கப்போறோம். அதுக்குத் தகுந்தது மாதிரி எழுதுடா” என்று சிவாஜி சொன்னார். ‘சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில், ‘வியட்நாம் வீடு’ படத்தை அவரே தயாரித்தார். சுந்தரம், சிவாஜிக்காக ரசித்து ரசித்து வசனங்களை எழுதினார். சிவாஜியை ரசித்து ரசித்து இயக்கும் பி.மாதவன் படத்தை இயக்கினார்.

சிவாஜி நடித்த கதாபாத்திரங்களின் பெயர்கள் பலவும் நமக்கு இன்றைக்கும் மறக்கவில்லைதானே. அப்படியொரு புகழுடன் இன்றைக்கும் நிலைத்திருக்கிறது ‘பிரஸ்டீஜ் பத்மநாபன்’ எனும் பெயர்!

நாடக உலகிலும் திரையுலகிலும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரத்தின் பேரும் புகழும் பரவியது. இந்த சமயத்தில், இன்னொரு கதையை நாடகத்துக்காக எழுதினார். மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஒய்.ஜி.பார்த்தசாரதி அழைத்தார். “சுந்தரம், எங்க குழுவுக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுப்பா” என்றார். அவருக்க்காகவும் எழுதிக்கொடுத்தார். அந்த இரண்டு நாடகங்களும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போயின. இரண்டு நாடகங்களையும் பார்க்க சிவாஜி அழைக்கப்பட்டார். நாடகம் பார்த்தார். மேஜர் சுந்தர்ராஜன் நடித்த நாடகத்தை உடனே படமாகப் பண்ணுவோம் என்றார்.

ஞானஒளி
ஞானஒளி

மீண்டும் பி.மாதவனை அழைத்தார். கதையைக் கேட்கச் சொன்னார். சிவாஜி பூண்டி மாதாக்கோயிலின் ‘ஆன்டனி’யானார். மேஜர், போலீஸ் ‘லாரன்ஸ்’ ஆனார். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது ‘ஞான ஒளி’. சிவாஜி, மேஜர், சாரதா ஆகியோரின் நடிப்பு பேசப்பட்டது (இப்போதுகூட இந்தப் படத்தை ரீமெக் செய்யலாம். இந்தக் கால ரசிகர்களும் ரசிப்பார்கள்).

சரி... மற்றுமொரு நாடகம்?

“சுந்தரா... இதையும் படமா பண்றோம். இந்தப் படத்தை நீயே தயாரிச்சிரு. நான் நடிச்சிக் கொடுக்கறேன்” என்று சொல்லி கைகுலுக்கினார். கைகொடுத்தார். கைதூக்கிவிட்டார் சிவாஜி கணேசன். ’கண்ணன் வந்தான்’ என்கிற அந்த நாடகம், சினிமாவுக்காக வேறொரு பெயர் சூட்டப்பட்டது. அதுதான் ‘கெளரவம்’. படத்தை ‘தி இந்து’ ரங்கராஜனுடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்து, அதனை சிவாஜியிடம் தெரிவிக்கச் சென்றார் சுந்தரம்.“அப்படியா... நல்லது நல்லது. நீ என்ன பண்றே? இந்தப் படத்தை நீயே டைரக்ட்டும் பண்ணிடுறே” என்று சிவாஜி சொல்ல, படத்துக்குக் கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கினார் வியட்நாம் வீடு சுந்தரம்.

திரைப் பயணம் தொடர்ந்தது. சில படங்களுக்குக் கதை மட்டும் கொடுத்தார். சில படங்களுக்கு மட்டும் வசனம் எழுதினார். சித்ரா லட்சுமணன் தயாரித்து கமலை வைத்து இயக்கிய ‘சூரசம்ஹாரம்’ படத்துக்கு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் தான் வசனகர்த்தா. தொலைக்காட்சி பக்கமும் கால் பதித்து, கதையிலும் வசனத்திலும் ஏன் நடிப்பிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

ஒரு கதையை எப்படி உருவாக்க வேண்டும், எந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு காட்சியில், ஒரு சம்பவத்தில் என்ன வசனம் பேசினால், ரசிகர்கள் ஒன்றிப்போவார்கள் என்பதன் சூட்சுமங்களை அறிந்து வைத்த மிகச்சிறந்த கதை வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். 2016 ஆகஸ்ட் 6-ல் காலமானார்.

கெளரவம்
கெளரவம்

’சாவித்ரீ... சாவித்ரீ’ என்று அழைத்த பிரஸ்டீஜ் பத்மநாபனையும் ‘லாரன்ஸு லாரன்ஸூ’ என்று தன் நெஞ்சைத் தட்டி தடவிக்கொடுக்கிற மாதாக்கோயிலில் மணியடிக்கும் ஆண்டனியாகட்டும், ஸ்டைலாகப் பைப் பிடித்துக் கொண்டு, நல்லதோ கெட்டதோ அதற்காக வாதாடி ஜெயிப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்தாகட்டும்... இன்றைக்கும் நமக்குள்ளே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அற்புதப் படைப்பாளி ‘வியட்நாம் வீடு’ சுந்தரத்தின் நினைவுநாளில் அவரைப் போற்றுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in