‘தளபதிக்கு இது தேவையா?’ புதிய சர்ச்சையில் விஜயின் ‘விசில் போடு’

விசில் போடு பாடலில் விஜய்,  பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்டோர்
விசில் போடு பாடலில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்டோர்

விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ’விசில்போடு’ லிரிக்கல் வீடியோ இன்று இணையத்தில் வெளியாகி வரவேற்பை குவித்து வருகிறது. இதனூடே, அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்க்கு பொருந்தாத காட்சிகள் திரைப்படத்தில் இருப்பது குறித்து சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

கோலிவுட் என்பது தமிழக அரசியல் மற்றும் ஆட்சி பீடத்துக்கான ராஜபாட்டையாகவும் விளங்கி வருகிறது. இந்த வழியில் பல நட்சத்திரங்கள், சினிமா மூலமாக சேகரித்த பிரபல்யம், ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை தேர்தல் அரசியலில் வாக்குகளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களின் வரிசையில் அண்மை வரவாக தளபதி விஜயும் சேர்ந்திருக்கிறார்.

’விசில் போடு’
’விசில் போடு’

புதிய கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இந்த இடைவெளியில் ஒப்புக்கொண்ட ஒரு சில திரைப்படங்களை வேகமாக முடித்துக்கொடுத்தும் வருகிறார். இதில் இன்றைய தினம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடாக, ’விசில் போடு’ என்ற லிரிக்கல் வீடியோ வெளியானது.

பாடல் வெளியான வேகத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜாவுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் இணைந்திருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை யுவன் சிறப்பாக நேர் செய்துள்ளார். விஜய் மட்டுமன்றி பிரபு தேவா, பிரசாந்த் என எதிர்பார்ப்புக்குரிய சக நடிகர்களும் இந்த பாடலில் விஜயுடன் சேர்ந்து நடனமாடுகின்றனர்.

இசை, காட்சி அனுபவம், பாடலை பாடிய விஜய் என ரசிகப் பார்வைக்கு எந்த குறையும் வைக்காத ’விசில் போடு’ பாடல், இன்னொரு திசையில் சர்ச்சைக்கு அடித்தளம் இட்டுள்ளது. அரசியல் கட்சி ஒன்றை புதிதாக கட்டமைத்து, அதற்கான உறுப்பினர் சேர்க்கையை வேகமாக விஜய் முன்னெடுத்து வருகிறார். நட்சத்திர ஈர்ப்பு காரணமாக இளம் வயதினர் விஜய் கட்சியில் வேகமாக சேர்ந்தும் வருகின்றனர்.

இந்த சூழலில் வழக்கம்போல மது, போதை, உற்சாகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பாடலில் விஜய் தோன்றுவதற்கு எதிராக விமர்சனங்கள் முளைத்து வருகின்றன. சினிமா அடித்தளத்தில் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்த எம்ஜிஆர் போன்றவர்கள், ரசிகர்களின் நலன், அவர்களின் அபிமானம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே தங்களுக்கான திரைப்பட காட்சிகளை செதுக்கி அமைப்பார்கள். மாறாக விஜய் இன்னமும் அதே போதை பாடலில் உழல்வது சரியா என்றும், பொறுப்பின்றி பார், பார்ட்டி, மப்பு, மது ரகங்கள் என்ற வாசகங்களுடனான பாடல் காட்சியில் தோன்றுவது முறையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in