ரஜினியின் படத்தை அப்படியே மாற்றி இயக்கிய விசு!

- சுமாரான வெற்றியை சூப்பர் வெற்றியாக்கிய விசுவின் ’சதுரங்க’ விளையாட்டு!
ரஜினியின் படத்தை அப்படியே மாற்றி இயக்கிய விசு!

குடும்பக் கதைகளின் நாயகர்களில் இயக்குநரும் நடிகருமான விசுவும் ஒருவர். இவரின் படங்களுக்கு மொத்தக் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து படம் பார்க்கச் செல்வார்கள். குடும்பத்தில் ஒருவர் மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டால், அன்றைய நாளில் வீட்டில் மகாபாரத யுத்தமே நிகழும். அந்த அளவுக்கு அனைத்து தரப்பு வயதினருக்கும் விசுவின் படங்கள் மீது ஈர்ப்பு உண்டு.

விசுவின் கதைகளில், நல்ல அழுத்தமான ஒரு விஷயத்தைப் பாடமாக வைத்திருப்பார். திரைக்கதையில் நேர்க்கோட்டுடன், கதைக்குள்ளேயே பயணிக்க வைப்பதிலும் விசு அசகாய சூரர். முக்கியமாக, வசனங்களில், ஒவ்வொரு இடத்திலும் ‘பஞ்ச்’ வைத்திருப்பார். காமெடி வைத்திருப்பார். கலகலவென படங்களை நகர்த்திச் செல்வார். படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தை அவரே ஏற்று நடிப்பார். ஒரு நாடகத்தை உருவாக்குவார். பிரச்சினையை இவரே பெரிதாக்குவார். பிறகு அந்தப் பிரச்சினைக்கு என்ன செய்வது என்று தெரியாமல், ஒவ்வொரு கதாபாத்திரமும் குழம்பித் தவிக்கும். இறுதியில் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்து, அனைவரையும் ஒன்று சேர்த்துவைப்பார் விசு.

விசுவின் சினிமாக்கள், நாடகபாணி என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லோராலும் வெகுவாகவே ரசிக்கப்பட்டன. இவரின் நாடகங்களும் சக்கைப்போடு போட்டன. இவரின் பல நாடகங்கள், அனைவரையும் கவரும் வகையில் இருந்தன. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், திரைத்துறையினரையும் இவரின் நாடகங்கள் கவர்ந்து ஈர்த்தன. அப்படித்தான், சித்ரா ஆர்ட்ஸ் எனும் கம்பெனியின் தயாரிப்பாளர் கே.ஏ.நடராஜன், விசுவின் நாடகத்தைப் பார்த்துவிட்டு, படமாக்க முன் வந்தார்.

விசுவின் கதை, வசனம் எழுதினார். தயாரிப்பாளர் கே.ஏ.நடராஜனே திரைக்கதை எழுதி படத்தைத் தயாரித்தார். ‘பசி’ துரை இயக்கினார். கவிஞர் வாலி பாடல்களை எழுத, வி.குமார் இசையமைக்க, ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த், ஜெயசித்ரா, பிரமீளா முதலானோர் நடித்தார்கள். 1978-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் படம் பார்த்தவர்கள் ‘நல்ல படம்’ என்று சர்டிஃபிகேட் கொடுத்தார்கள். ரஜினி அண்ணனாகவும் ஸ்ரீகாந்த் தம்பியாகவும் நடித்த இந்தப் படத்தில் ரஜினிக்கு பிரமீளாவும் ஸ்ரீகாந்துக்கு ஜெயசித்ராவும் ஜோடியாக நடித்தார்கள்.

பிராமணக் குடும்பம். ஆக, ரஜினி இதில் பிராமணராக நடித்திருந்தார். அம்மாவாக பண்டரிபாய் நடித்தார். தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், எம்.ஆர்.ராஜாமணி, ஒய்.ஜி. மகேந்திரன் முதலானோர் நடித்தார்கள்.

ரஜினி நல்லவர். ஸ்ரீகாந்த் கல்லூரி மாணவர். அடாவடிகள் செய்பவர். ரஜினிக்கு முறைப்படி திருமணம் நடக்கும். அவரின் மனைவி பிரமீளா பணத்தாசை பிடித்தவர். ஸ்ரீகாந்த் செய்த சேட்டைகளாலும் லூட்டிகளாலும் ஜெயசித்ராவுக்கும் அவருக்கும் திருமணம் நடக்கும். அதுவரை கெட்டவன் எனப் பேரெடுத்த ஸ்ரீகாந்த், திருமணத்துக்குப் பிறகு உழைத்து முன்னேறுவார். அதுவரை நல்லவன் எனப் பாராட்டப்பட்ட ரஜினி, மனைவியின் ஆசைக்காக லஞ்சம் வாங்கி, ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார். கடைசியில் அம்மா பண்டரிபாய் இறப்பார். ரஜினி ஜெயிலுக்குப் போவார். இதுதான் விசு கதை எழுதிய ‘சதுரங்கம்’ படத்தின் கதை.

இதன் பின்னர் விசு ‘குடும்பம் ஒரு கதம்பம்’ மூலம் நடிகராக வலம் வந்தார். ‘மணல் கயிறு’ மூலம் இயக்குநராக ஜெயித்தார். ‘சம்சாரம் அது மின்சாரம்’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இதன் பின்னர் தன் குருநாதர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்காக படமொன்றை இயக்கி நடித்தார். அந்தப் படம்தான் ‘திருமதி ஒரு வெகுமதி’ 1987-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம்.

எஸ்.வி.சேகரும் பாண்டியனும் அண்ணன் தம்பிகள். எஸ்.வி.சேகர் நல்லவர். பாண்டியன் அடாவடிகள் செய்யும் கல்லூரி மாணவர். நல்லவரான சேகர், கோகிலாவைத் திருமணம் செய்துகொள்வார். சேட்டைகளும் லூட்டிகளுமாக இருப்பவருக்கு திடீரென ஜெயஸ்ரீயுடன் திருமணம் நடக்கும். நல்லவரான எஸ்.வி.சேகர், மனைவியின் பகட்டு வாழ்க்கைக்காக லஞ்சம் வாங்குவார். கெட்டவரான பாண்டியன், மனைவி வந்த பிறகு பொறுப்புடன் செயல்பட்டு, உழைத்து முன்னுக்கு வருவார்.

‘அட... விசுவின் ‘சதுரங்கம்’ மாதிரியே, விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ இருக்கிறதே... என்று நினைக்கிறீர்கள்தானே?

ஆமாம். ‘சதுரங்கம்’ படத்தில், அம்மா கேரக்டராக பண்டரிபாய். ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில், அக்காவாக கல்பனா. இதில் ரஜினி, ஸ்ரீகாந்த். அதில் எஸ்.வி.சேகர், பாண்டியன். இதில், பிரமீளா, ஜெயசித்ரா. அதில், கோகிலா, ஜெயஸ்ரீ. ரஜினிக்கு பதில் எஸ்.வி.சேகர். ஸ்ரீகாந்துக்கு பதில் பாண்டியன். பிரமீளாவுக்கு பதில் கோகிலா. ஜெயசித்ராவுக்கு பதில் ஜெயஸ்ரீ. பண்டரிபாய்க்கு பதிலாக அக்கா கேரக்டரில் கல்பனா. மறைந்து விட்ட அக்காவின் கணவராக அத்திம்பேர் தேங்காய் சீனிவாசன். இவர்தான் பிரமீளாவின் அண்ணன். இங்கே, அக்கா கல்பனாவின் கணவர் நிழல்கள் ரவி. கோகிலாவுக்கு அம்மாவாக எம்.என்.ராஜம்.

அதுமட்டுமா? வி.கோபாலகிருஷ்ணன், ரஜினியின் மனைவி பிரமீளா மூலமாக ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார். ‘திருமதி ஒரு வெகுமதி’யில், கிஷ்மு, எஸ்.வி.சேகரின் மனைவி கோகிலா மூலமாக லஞ்சம் வாங்கத் தூண்டுவார். ‘சதுரங்கம்’ படத்தில், ஜெயசித்ராவின் அப்பாவாக வி.கே.ராமசாமி, ‘’எனக்கு ஏதாவது பிரச்சினைகள் வரணும். அதை நான் தீர்க்கணும்’’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ‘திருமதி ஒரு வெகுமதி’யில், ஜெயஸ்ரீயின் அப்பாவாக விசு, ஒரு பிரச்சினையை உண்டு பண்ணி, மகளை பாண்டியனுக்கு திருமணம் செய்துவைப்பார்.

‘சதுரங்கம்’ படத்தில், அம்மா பண்டரிபாய் இறந்துவிடுவார். ‘திருமதி ஒரு வெகுமதி’யில் அக்கா கல்பனா இறந்துவிடுவார். ‘சதுரங்கம்’ படத்தில் ரஜினியை போலீஸ் கைதுசெய்யும். ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் எஸ்.வி.சேகர் கைதுசெய்யப்படுவார்.

நல்லவனாக இருக்கும் ரஜினி, கெட்ட வழியில் செல்ல மனைவி பிரமீளா தூண்டுவார். ‘திருமதி ஒரு வெகுமதி’யில் கணவர் எஸ்.வி.சேகரை லஞ்சம் வாங்க கோகிலா தூண்டுவார். ஸ்ரீகாந்த், திருந்தி முன்னேறுவதற்கு மனைவி ஜெயசித்ரா தூண்டுகோலாக இருப்பார். இங்கே... மனைவி ஜெயஸ்ரீயால், பாண்டியன் முன்னேறுவார்.

‘’லஞ்சம் வாங்கின கையால எனக்கு கொள்ளி போடக்கூடாது’’ என்று பண்டரிபாய் சொல்லியிருப்பார். ‘திருமதி ஒரு வெகுமதி’யில், ‘’நான் செஞ்ச தப்புக்கு என் புருஷனை ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போறாங்க. அவர் வெளியே வர்ற வரைக்கும் இந்த ரூம்தான் எனக்கு ஜெயில்’’ என்பார் கோகிலா. ‘சதுரங்கம்’ கறுப்பு வெள்ளைப் படம். ‘திருமதி ஒரு வெகுமதி’ வண்ணப்படம்.

‘சதுரங்கம்’ படத்தில் ‘மதனோத்ஸவம் ரதியோடுதான்’ என்ற பாடல் ஹிட்டானது. ‘திருமதி ஒரு வெகுமதி’யில் ‘ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே’ என்ற பாடல் ஹிட்டானது. ‘சதுரங்கம்’ சுமாராக ஓடியது. ஆனால், திரைக்கதையில் இன்னும் ஜால விளையாட்டுகள் ஆடியதால், ‘திருமதி ஒரு வெகுமதி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

‘சதுரங்கம்’ வெளியாகி, 45 ஆண்டுகளாகின்றன. ‘திருமதி ஒரு வெகுமதி’ வெளியாகி, 36 ஆண்டுகளாகின்றன. 78-ம் ஆண்டு வெளியான ‘சதுரங்கம்’ படத்தையும் 87-ம் ஆண்டு வந்த ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தையும் பார்த்தவர்கள் நிறையபேர் உண்டு. ஆனால், அதே படம்தான் இது... என்பது தெரியாமல் திரைக்கதையில் ‘சதுரங்கம்’ ஆடியதுதான் இயக்குநர் விசுவின் மகத்துவம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in