பொங்கல் ரிலீஸ் படங்களின் அதிர்ச்சி: மீண்டும் தள்ளிப்போகிறது ’வீரமே வாகை சூடும்’

விஷால், டிம்பிள் ஹயாதி
விஷால், டிம்பிள் ஹயாதி

விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப் போகிறது.

விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இதை அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இதில் டிம்பிள் ஹயாதி நாயகி. மேலும் மாரிமுத்து, யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஷால் தனது விஷால் பிலிம்பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இதன் டிரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து தமிழ்நாடு அரசு, இரவு ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தியதால், அஜித்தின் ’வலிமை’, விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன.

நடிகர் விஷால், வரும் 26-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால், பொங்கல் அன்று வெளியான சுமார் 8 திரைப்படங்களின் வசூல், திரையரங்க உரிமையாளர்களையும் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எந்தப் பொங்கலுக்கும் இல்லாத அளவு தியேட்டருக்கு கூட்டமே வரவில்லை. 10, 20 பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வந்ததால், பல படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள், படம் நன்றாக இருப்பதாகவும் அவசரப்பட்டு இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம், பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து ’வீரமே வாகை சூடும்’ படத்தின்வெளியீட்டை அவர் தள்ளி வைத்துள்ளதாக வெளிமாநில விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பிப்ரவரி 4-ம் தேதி வெளியாவதாக இருந்த பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீடும் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in