
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 28ம் தேதி இந்தியில் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது.
இதனிடையே, இந்த படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக பரபரப்பு புகாரை விஷால் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ, தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது. 30 கோடி ரூபாயில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை கடந்து வசூலித்து வருவதாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை (13.10.2023) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.