விஷால் கல்யாணம் பண்ணாமல் இருப்பது ஏன்?- உதயநிதி ஸ்டாலின் சொன்ன புதுத் தகவல்

விஷால் கல்யாணம் பண்ணாமல் இருப்பது ஏன்?- உதயநிதி ஸ்டாலின் சொன்ன புதுத் தகவல்

``நடிகர் சங்கம் கட்டிடத்தை வைத்துதான் விஷால் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்'' என்று நடிகர் உதயநிதி கலாய்த்தார்.

அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’லத்தி’. விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ``நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இதுவரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாகச் சென்றோம். கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம். அவ்வளவுதான். அதற்கு மேல் சொல்ல முடியாது. விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்துவிட்டு, தற்போது புரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளார்.

நான் சமீபத்தில் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் சண்டை, பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனால் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பார்.

இந்தப் படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தை பார்த்தால் விஷால், திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள். அதேபோல் நடிகர் சங்கக் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்துதான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்'' என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

விஷால் பேசியபோது, ``அவன்-இவன் படத்தில் நடித்த பின்புதான் என் நடிப்பின் மீது மரியாதை கிடைத்தது. அந்த படத்தில் கடைசி 10 நிமிடம் பாலா சார் எனக்கு கொடுத்தார். அதேபோல் இந்த படத்தில் இயக்குநர் வினோத் எனக்கு கடைசி 10 நிமிட காட்சி கொடுத்திருக்கிறார். இதுபோன்ற வாய்ப்புகள்தான் ஒரு நடிகனுக்கு மரியாதையை ஈட்டி தரும்'' என்றார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா, எஸ்.ஜே.சூர்யா, சுனேனா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம், பீட்டர் ஹெய்ன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in