அனைத்துப் பதவிகளையும் அள்ளியது விஷால் அணி

நள்ளிரவு வரை நீடித்த நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
விஷால்
விஷால்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி, அனைத்துப் பதவிகளையும் மொத்தமாக அள்ளியது.

நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாண்டவர் அணி வெற்றி பெற்றது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளருக்கு போட்டியிட்ட கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

24 செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை தொடர்ந்தது. இதில், குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, அஜய்ரத்தினம், பசுபதி, விக்னேஷ், சிபிராஜ், லதா, பிரசன்னா, நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், பிரேம்குமார் உட்பட பாண்டவர் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in