குறும்படம் பார்த்து இயக்குநருக்கு வாய்ப்பளித்த விஷால்

டிம்பிள் ஹயாதி, விஷால்
டிம்பிள் ஹயாதி, விஷால்

குறும்படம் பார்த்து, புதிய இயக்குநருக்கு வாய்ப்பளித்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ள படம், ’வீரமே வாகை சூடும்’. அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியுள்ளார். டிம்பிள் ஹயாதி நாயகியாக நடித்துள்ளார். மற்றும் யோகிபாபு, மாரிமுத்து, பாபுராஜ், வ.ஐ.ச.ஜெயபாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் பற்றி, விஷால் கூறும்போது, “து.ப.சரவணனின் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படம் பார்த்தேன். பிடித்திருந்தது. அவரைப் பாராட்டிவிட்டு, நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் என்றேன். அப்படி உருவானதுதான் ‘வீரமே வாகை சூடும்’. இதில் எனக்குப் பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குநருக்குள் இருக்கும் திறமையைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன். சரவணனுக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

புது இயக்குநரிடம் நல்ல கதையை கேட்டுவிட்டால், யுவன்தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இந்தப் படத்துக்கும் யுவன்தான் இசை அமைத்திருக்கிறார். நாயகி டிம்பிள் இந்தப்படம் மூலம் தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இந்தப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in