திரை விமர்சனம்: விருமன்

திரை விமர்சனம்: விருமன்

தாயின் மரணத்துக்குக் காரணமான தந்தையைக் கொல்லத் துடிக்கும் சிறுவன் வளர்ந்ததும் தந்தையைத் திருத்தி குடும்பத்தை ஒன்றிணைப்பதுதான் ‘விருமன்’.

தாசில்தார் முனியாண்டி (பிரகாஷ்ராஜ்) அதிகார மமதையும் பணவெறியும் பிடித்தவர். அவருடைய நான்காவது மகன் விருமன் (கார்த்தி) சிறுவனாக இருக்கும்போது தன் தாயின் (சரண்யா) மரணத்துக்குக் காரணமான தந்தையைக் கொல்ல கத்தியை எடுத்துக்கொண்டு துரத்துகிறான். இதனால் விருமனின் தாய் மாமா (ராஜ்கிரண்) அவனை வளர்க்கிறார். முனியாண்டி தன்னிடம் வளரும் மூன்று மகன்களையும் அவர்களின் மனைவிகளையும் சொத்துரிமையை வைத்து மிரட்டி அடிமைபோல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

முனியாண்டியின் கொட்டத்தை அடக்க பல வகைகளில் முயல்கிறான் விருமன். அவரை அவமதித்து பல வகைகளில் குடைச்சல் கொடுக்கிறான். அதேசமயம், அண்ணன்கள் மீது பாசமாக இருக்கிறான். அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறான். அண்ணன்கள் ஒவ்வொருவராக விருமனுடன் இணைகிறார்கள். இதனால் இன்னும் மூர்க்கமடையும் முனியாண்டி, தனது பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். விருமனைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார். இவ்வளவு மூர்க்கமாக இருக்கும் தந்தையை விருமன் எப்படி திருத்துகிறான் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

2015-ல் வெளியான ‘கொம்பன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முத்தையாவுடனும் மீண்டும் இணைந்திருக்கிறார் கார்த்தி. 2018-ல் வெளியான ’கடைக்குட்டி சிங்கம்’ அண்ணன் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இவர்கள் மூவரும் இணைந்திருக்கும் இந்தப் படம் ‘கொம்பனைப் போல் காரம் நிறைந்த கிராமத்து ஆக்‌ஷன் மசாலாவாகவும் திருப்தி தரவில்லை. ‘கடைக்குட்டி சிங்க’த்தைப் போல் குடும்ப பாசத்தை முன்வைத்த செண்டிமென்ட் படமாகவும் நிறைவளிக்கவில்லை. அதிலிருந்து ஆக்‌ஷன் என்னும் எண்ணெயையும் இதிலிருந்து சென்டிமென்ட் என்னும் மாவையும் கலந்து சுடப்பட்ட தோசை பல படங்களில் பார்த்து சலித்துவிட்ட கதை, காட்சிகள் ஆகியவற்றால் புலித்த மாவு தோசையைத் தின்ற உணர்வையே தருகிறது.

கிராமத்து அப்பா மகனுக்கு இடையிலான ஈகோ மோதல் என்பது புதுமையான கதைக்களம். ஆனால், அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு சுவாரசியமான முரண்களைக் கொண்ட காட்சிகளுடன் திரைக்கதை அமைக்கப்படவில்லை. நாயகனின் குடும்ப பாசத்தைச் சுற்றியும் இறந்துவிட்ட அவருடைய அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் வைத்து அமைக்கப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையின் போக்கு திரைக்கதை திருப்பங்கள் அனைத்தையும் எளிதாக ஊகித்துவிட முடிகிறது.

இது போதாதென்று, ஒன்றரை மணி நேரத்துக்கு நீளும் முதல்பாதி ஆபரேட்டர் இடைவேளை விட மறந்துவிட்டாரோ என்று நினைக்க வைக்கிறது. யாரையும் மதிக்காமல் சுயநலத்துடன் அதிகாரத் திமிருடனும் வாழும் முனியாண்டி, இறுதியில் தன் தவறுகளுக்காக தற்கொலைக்குத் துணிவதும் அப்போது அவரைக் காப்பாற்றிவிட்டு அதுவரை அவரைப் பகைத்துக் கொண்டிருந்த மகன் பேசும் வசனங்களும் சற்றே பாராட்டத்தக்கது. ஆனால், படத்தை நீட்டித்துக்கொண்டே போன அலுப்பில் இந்த இறுதிக் காட்சி ஏற்படுத்தியிருக்க வேண்டிய உணர்வுபூர்வமான தாக்கம் முழுமையாகக் கிடைக்கவில்லை.

இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி சில கதாபாத்திரங்களின் சுவாரசியமான வடிவமைப்பும் ஆங்காங்கே சில ரசிக்கத்தக்க காட்சிகளுமே படத்தை ஓரளவு பார்க்கவைக்கின்றன. தனக்கென்று குடும்பம் இல்லாமல் விருமனை தூக்கி வளர்க்கும் மாமன் (ராஜ்கிரண்), தனது வாழ்க்கையில் நேர்ந்த இழப்பால் அதிகம் பேசாமலேயே இருக்கும் அவருடைய தம்பி (கருணாஸ்), சுயதொழிலில் ஈடுபட்டு குடும்பத்தைக் காக்கும் தன்னம்பிக்கை மிக்க நாயகனின் காதலி (அதிதி சங்கர்), விருமனின் தோழன் குத்துக்கல் (சூரி), ஏலங்களுக்குச் சென்று தொகையை ஏற்றிவிட்டு ஏலத்தை நடத்தவிடாமல் செய்யும் ‘ஏழரை’ கோஷ்டி (ஆர்.கே.சுரேஷ் குழுவினர்)., எதிர்தரப்பில் இருந்தாலும் கொழுந்தனின் நல்ல மனத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் அண்ணியர் (அருந்ததி, மைனா), தக்க தருணத்தில் மனம் திருந்தி நாயகனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ (வி.கே.சுந்தர்), தாசில்தாருக்கு அடிபணிந்தாலும் அவ்வப்போது அவரை நக்கலடிக்கும் தலையாரி (சிங்கம்புலி) என படத்தின் பல கதாபாத்திரங்களும் அவர்களின் சின்னச் சின்ன செய்கைகளும் ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.

நாயகனின் காதல் காட்சிககும் ரசனையே. நாயகியின் கதாபாத்திர அமைப்பில் உள்ள சுவாரசியங்களே இதற்குக் காரணம். இடைவேளைக்குச் சற்று முன்னால் வரும் ஃப்ளாஷ்பேக்கில் விருமனின் அம்மா இறந்ததற்கான காரணம் சொல்லப்படுகிறது. கதையின் உயிர்நாடியாக இருக்கும் அந்தப் பகுதி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இடைவேளையை ஒட்டி வரும் பஞ்சாயத்துக் காட்சியும் ரசிக்க வைக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் ஊராட்சி ஒன்றிய கேண்டீன் ஏலம் தொடர்பான காட்சிகளும் கொஞ்சம் கலகலப்பூட்டுகின்றன.

வீரமும் பாசமும் நிறைந்த கிராமத்து இளைஞனாக கார்த்தி வழக்கம்போல் தன் பங்களிப்பை சரியாகத் தந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவர் அடித்தாலே எதிரிகள் கீழே விழுந்து விடுவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய உடலமைப்பைப் பேணியிருப்பதோடு உடல்மொழியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், வழக்கமான கதாபாத்திரம் என்பதால் அவரிடமிருந்து புதிதாக எதுவும் கிடைக்கவில்லை.

மாறாக அதிதி ஷங்கர், கதாபாத்திரத்தில் இருக்கும் சுவாரசியத்தன்மையை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு புதுமுகம் என்று நம்பவே முடியாத அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அழகு, இளமை, காதலுக்கான எக்ஸ்பிரஷன், நடனம் போன்ற வழக்கமான ஹீரோயினுக்குத் தேவையான விஷயங்களிலும் குறைவைக்கவில்லை. பிரகாஷ்ராஜ் வழக்கம்போல் தன் நடிப்பாளுமையால் படத்தின் பிரதான எதிர்மறைக் கதாபாத்திரத்துக்கு வலுகூட்டியிருக்கிறார். ராஜ் கிரணும் வழக்கமான கதாபாத்திரத்தில் தோன்றினாலும் தன் இருப்பை உணர்த்தத் தவறவில்லை. சூரி, சிங்கம்புலி ஆகியோர் தம் ஒற்றைவரி ரியாக்‌ஷன் கமெண்டுகளால் சிரிக்கவைக்கிறார்கள். விருமனின் அண்ணன்களாக வசுமித்ர, மனோஜ் கே.பாரதி, ராஜ்குமார் ஆகியோரும் அண்ணியராக அருந்ததி, மைனா ஆகியோரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

மகனின் முரட்டுத்தனத்துக்கு முட்டுக்கொடுக்கும் ‘அப்பத்தாவாக’ வடிவக்கரசி தனது அனுபவ முத்திரையை பதிக்கிறார். உண்மையில் படத்தின் சுவாரசியமின்மை இதுபோன்ற திறமையான நடிகர்களால் ஓரளவுக்கு சரிக்கட்டப்பட்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ’காஞ்ச பூவு கண்ணால’, ‘மதுர வீரன்’ பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. எனினும் பின்னணி இசையில் பெரிதாக ஒன்றும் இல்லை. செல்வகுமார் எஸ்.கே.வின் ஒளிப்பதிவு கிராமத்து ஆக்‌ஷன் படங்களுக்கான ஃபர்முலாவைப் பின்பற்றியிருக்கிறது.

கதையிலும் திரைக்கதையிலும் புதுமையும் சுவாரசியமும் இல்லாத ‘விருமன்’ கதாபாத்திரங்களில் இருக்கும் புதுமையாலும் அவற்றை ஏற்றிருக்கும் நடிகர்கர்களின் பங்களிப்பாலும் ஓரளவு தேறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in