‘விக்ரம்’ வாய்ப்புக்கு நன்றி சொல்லும் வில்லேஜ் குக்கிங் குழு!

‘விக்ரம்’ வாய்ப்புக்கு நன்றி சொல்லும் வில்லேஜ் குக்கிங் குழு!

‘விக்ரம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக வில்லேஜ் குக்கிங் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்' திரைப்படம் இந்த வாரம் வெளியானது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் படம் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. இது போன்ற வசூல் மற்றும் வெற்றியைத் தன் சினிமா பயணத்தில் பார்த்ததில்லை என நடிகர் கமல்ஹாசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் படம் உருவாக்கும் விதத்தில் ஒவ்வொரு வகையான அடையாளம் வைத்திருப்பார்கள். அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் இரவுக் காட்சிகள், பிரியாணி ஆகியவை தவறாமல் இடம்பெறும்.
இவை ‘விக்ரம்' படத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ‘விக்ரம்' படத்தின் முக்கியமான திருமணக் காட்சியில் பிரியாணி சமைப்பது போன்று காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதில் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் தங்களது பிரத்யேக ஸ்டைலில் அனைவருக்கும் வணக்கம் சொல்லி பிரியாணி சமைக்கும் காட்சியை லோகேஷ் படமாக்கி உள்ளார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த படத்தில் தங்களது அணியை இடம் பெற செய்ததற்காக நன்றி தெரிவித்து வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், 'திரையரங்குகளில் இன்று 'விக்ரம்' திரைப்படத்தை பார்த்தோம். படம் மாஸாக மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது. படத்தில் எங்கள் காட்சி வந்தபோது திரையரங்குகளில் அனைவரும் கொடுத்த வரவேற்பு எங்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. மேலும் எங்களுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டுகளையும் எங்களது யூடியூப் சேனலில் கமென்ட்கள் மூலம் தெரிந்துகொண்டோம்.

இப்படி இந்தப் படம் மூலம் மக்களிடையே எங்களுக்கு இருந்த வரவேற்பைப் பார்க்க வைத்து அதற்கான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. நடிகர் கமல்ஹாசனின் படம் என்றாலே காலத்துக்கும் நின்று பேசும். 'விக்ரம்' படமும் அது போன்ற வெற்றியையே ஈட்டியுள்ளது.

அப்படியான பெருங்கடலில் எங்களையும் சிறு துளியாய் ஏற்றுக்கொண்ட கமல் சாருக்கு நன்றி. எங்களை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்காக லோகேஷ் எங்களை அணுகியபோது, 'இந்தப் படத்திற்குப் பிறகு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். ஆனால், முதலில் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது நானாகத்தான் இருக்க வேண்டும்' என்றார். அதை அப்படியே செய்தார்.

அதே போல, நடிகர் விஜய் சேதுபதியும் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும்போது வரும் பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் எங்களுக்கு அறிவுறுத்தினார். அவருக்கும் நன்றி. லோகேஷ் கனகராஜ் மேன்மேலும் வளர வாழ்த்துகள்' என அக்குழுவினர் பேசியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in