`பொன்னியின் செல்வன்’ ஆதித்ய கரிகாலன் லுக் வெளியீடு: டீசர் ரிலீஸ் எப்போது?

`பொன்னியின் செல்வன்’ ஆதித்ய கரிகாலன் லுக் வெளியீடு: டீசர் ரிலீஸ் எப்போது?

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆதித்ய கரிகாலன் தோற்றத்தை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கல்கியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ’வருகிறான் சோழன்’ என்ற தலைப்புடன் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில், சோழ பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்ய கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், ’கடுமையான போர் வீரன். காட்டுப்புலி. பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலனை வரவேற்கிறோம்’ என்று மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து கல்கியின் நாவலைப் படித்து மனதில் உருவாக்கி வைத்திருந்த கரிகாலனின் தோற்றத்தை விக்ரம் அப்படியே வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே இந்தப் படத்தின் டீசர் வரும் 8-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in