
ஹிர்த்திக் ரோஷன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் நடித்து வரும் ’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உட்பட பலர் நடித்து தமிழில் வரவேற்பைப் பெற்ற படம், ’விக்ரம் வேதா’. புஷ்கர் - காயத்ரி இயக்கிய இந்தப் படத்துக்கு கே.மணிகண்டன் வசனம் எழுதியிருந்தார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்திருந்த இந்தப் படம் 2017 -ம் ஆண்டு வெளியானது.
இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில், மாதவனின் விக்ரம் கேரக்டரில் சைஃப் அலி கானும், விஜய் சேதுபதியின் வேதா கேரக்டரில் ஹிர்த்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். வேதா கேரக்டரில் முதலில் ஆமிர்கான் நடிப்பதாக இருந்தது. அவர் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் இதில் நடிக்கவில்லை. இதில் ராதிகா ஆப்தே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. செப்டம்பர் 30 -ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
https://twitter.com/PushkarGayatri/status/1480384273735581700
இதற்கிடையே, ஹிர்த்திக் ரோஷனுக்கு இன்று 48-வது பிறந்த நாள் என்பதால், அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முகம் மற்றும் உடலில் காயங்களுடனும் தாடியுடனும் இருக்கும் ஹிர்த்திக் ரோஷனின் தோற்றத்தை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.