டீனா கதாபாத்திரத்தை நாம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது!

‘விக்ரம்’ ஸ்வதிஸ்டா நேர்காணல்
ஸ்வதிஸ்டா
ஸ்வதிஸ்டா

அண்மையில் வெளியான 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனின் மருமகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்வதிஸ்டா. படத்தின் வெற்றியை கமல் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், ஸ்வதிஸ்டாவும் உற்சாகத் துள்ளலில் இருக்கிறார். அவரிடம் காமதேனு மின்னிதழுக்காக பேசியதிலிருந்து...

'விக்ரம்' யூனிட்டுக்கு நீங்கள் தேர்வான கதையை சொல்லுங்கள்?

படக்குழுவினர் என்னை ஆரம்பத்திலேயே அணுகினார்கள். அதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்துப் பேசினேன். எல்லாம் முடிந்து படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில், கரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஷெட்யூல் தள்ளிப்போனது.

பொதுமுடக்கம் எல்லாம் முடிவுக்கு வந்து ஆகஸ்டில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயம், எனது கதாபாத்திரத்துக்கு வேறொருவரைத் தேடுவதாகக் கேள்விப்பட்டேன். அதனால் ‘விக்ரம்’ படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்ற குழப்பம் நீடித்தது. அப்போதுதான் எனக்கு ஒரு ஆடிஷன் வைத்து ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தார்கள். அதில் திருப்தியாக இருந்ததால் என்னையே இறுதி செய்தார்கள். இதுதான் ‘விக்ரம்’ படத்துக்குள் நான் வந்த கதை.

உங்கள் கதாபாத்திரம் எந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்திருந்தது?

இவ்வளவு பெரிய படம், பெரிய நடிகர்கள் எனும் போது முதலில் எனது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் சென்றடையுமா என்ற சந்தேகம் இருந்தது. அதை இயக்குநரிடம் கேட்டபோது, “கண்டிப்பாக உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். படத்தின் பெண் கதாபாத்திரங்களில் நீங்களும் முதன்மையாக இருக்கிறீர்கள்” என்றார். அத்துடன், இது கமல் படம். ஆரம்பக் கட்டத்திலேயே கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமைவது அத்தனை எளிதல்ல. அது எனக்கு அமைந்தது; தட்டாமல் ஒத்துக் கொண்டேன்.

படத்தில் உங்களுக்குத் தான் கமலுடன் இணைந்து நடிக்கும்படியான காட்சிகள் அதிகம். அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

எனக்கு முதலில் கொஞ்சம் பயம்தான். ஏனென்றால், இதற்கு முன்பு நிறையப் பேர் கமல் சாரைப் பற்றி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேலை என்றால் அவர் வேலையை மட்டும்தான் பார்ப்பார். அதிலிருந்து கவனம் சிதறமாட்டார். வேலையில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், நான் கேள்விப்பட்ட அளவுக்கு இல்லை. ரொம்பவே சகஜமாக எல்லோருடனும் சிரித்துப் பழகினார். அதிலும் எங்கள் காட்சி படமாக்கப்படும்போது குழந்தை விக்ரம் இருந்தான். அதனால் படப்பிடிப்பு தளத்தில் யாரும் அவ்வளவு சத்தமாக கோபப்பட்டு பேசவே மாட்டார்கள். லோகேஷ் கூட குழந்தையுடன் படப்பிடிப்பு இருக்கும் இடத்தில் மைக்கில் பேச மாட்டார்.

‘விக்ரம்' படத்தில் டீனா கதாபாத்திரம் முக்கியமானது. உங்களுடனேயே அந்த கதாபாத்திரம் பயணிக்கும். திடீரென்று அந்த கதாபாத்திரத்தின் மாற்றம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. நீங்கள் கூட இருந்து பார்த்தீர்களா... எப்படி இருந்தது?

எனக்கு ஆரம்பத்தில் டீனா கதாபாத்திரம் இப்படி மாறும் என்று தெரியவே தெரியாது. அந்த முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்படும் போதுகூட நான் அங்கு இருக்கமாட்டேன். அது மட்டுமில்லாமல் டீனா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி மாஸ்டரும் மிகவும் ஜாலியாக அமைதியாகவே பேசுவார்.

நானே முதல் முறை படத்தில் தான் அந்த சண்டைக் காட்சியைப் பார்த்தேன். டீனா கதாபாத்திரத்தை நாம் செய்து இருக்கலாம், நாமும் ஒரு படத்தில் ஏதாவது ஒரு ஏஜென்டாக இருந்திருக்கலாமோ என்று எனக்கு படம் பார்க்கும் பொழுது தோன்றும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

உங்கள் வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் இந்த படத்தில் நீங்கள் நடித்ததற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

'விக்ரம்' படத்தில் கமலுடன் நடிக்கிறேன் என்ற விஷயத்தை அம்மா அப்பா மற்றும் நெருங்கிய சில நண்பர்களை தவிர நான் பெரிதாக யாரிடமும் சொல்லவில்லை. படம் வரட்டும் என்று தான் காத்திருந்தேன். படத்தில் அவ்வளவு பெரிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் பொழுது ட்ரெய்லர் காட்சியில் நமக்கெங்கே இடமிருக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதையும் தாண்டி நான் ட்ரெய்லரில் இருந்தேன். அதிலும் குறிப்பாக கமலைப் பார்த்து, “நல்லவரா கெட்டவரா?” என்று நான் பேசும் வசனத்திற்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு இருந்தது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட கமல் உங்களை குறிப்பிட்டு மேடைக்கு வரச்சொல்லி இருந்தாரே... அந்த தருணம் எப்படி இருந்தது?

CANON

ஆமாம் மேடையில் ஒவ்வொரு நடிகர்களின் கேங் என்று அழைத்துக் கொண்டிருக்கும் பொழுது என் பெயரை அழைக்க மறந்துவிட்டார்கள். கமல் சார்தான் என் பெயரைக் குறிப்பிட்டு, “மேல வாங்க” என்று அழைத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது!

சினிமாவுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

நான் கர்நாடகத்துப் பொண்ணு. ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஜர்னலிசம் துறையில் மாஸ்டர்ஸ் முடித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போதே, சில நியூஸ் சேனல்களில் வேலை பார்த்திருக்கிறேன். அதில் முதன் முதலில் எனக்கு இயக்குநர் லிங்குசாமியை பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்தான் என்னிடம், “நீ ஏன் சினிமாவில் நடிக்க முயற்சி செய்யக்கூடாது?” என்று கேட்டார். அன்று அவர் சொன்னது இன்று பலித்துவிட்டது.

எனது முதல் படம் மிஷ்கின் இயக்கிய 'சவரக்கத்தி' தான். அந்தப் படத்துக்குப் பிறகு, விளம்பரங்களில் நடிப்பதிலும் நிகழ்ச்சி களைத் தொகுத்து வழங்குவதிலும் கவனம் செலுத்தினேன். இப்போது மீண்டும் சினிமாவின் பக்கம் திரும்பியிருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in