திரை விமர்சனம்: விக்ரம்

திரை விமர்சனம்: விக்ரம்

காவல் துறையிலும் அரசுத் துறைகளிலும் உயர் பதவிகளில் ஊடுருவியிருக்கும் சிலரின் துணையுடன் இயங்கும் போதைப் பொருள் கடத்தல் குழுவை அண்டர்கவர் ஏஜென்ட்கள் சிலர் கூட்டு சேர்ந்து சின்னபின்னமாக்குவதுதான் ’விக்ரம்’ படத்தின் கதை.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறை அதிகாரிகள் சிலரும் காவல் துறையுடன் தொடர்பில்லாத ஒருவரும் முகமூடி அணிந்த மர்ம கும்பலால் கொல்லப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் காவல் துறை மீதான நம்பிக்கை போய்விடும் என்பதால் அண்டர்கவர் ஏஜென்ட்களிடம் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறது காவல் துறை. பெயர் உட்பட தமது அசலான அடையாளங்களை மறைத்துக்கொண்டு சட்டத்தின் பார்வைக்கு முற்றிலும் வெளியே இயங்கியபடி குற்றவாளிகளைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் அந்தக் குழுவின் தலைவன் அமர் (ஃபகத் ஃபாசில்).

கொல்லப்பட்டவர்களில் காவல் துறையைச் சாராத ஒருவரைப் பற்றி அவருடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கிறார் அமர். அதன் மூலம் இந்தக் கொலைகளுக்கும் சந்தனத்தின் (விஜய் சேதுபதி) தலைமையில் இயங்கும் போதைப் பொருள் மாஃபியாவுக்கும் தொடர்பிருப்பதைத் தெரிந்துகொள்கிறார். ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு டன் போதைப் பொருள் காவல் துறையில் கைப்பற்றப்பட்டுவிட்டதால் அதற்குக் காரணமான காவல் அதிகாரிகளைக் கொன்று தனது பொருளை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் சந்தனம். அடுத்த ஏழு நாட்களில் கொலையாளிகள் தமது அடுத்த இலக்கை கொன்றுவிடுவதாக அறிவிக்கிறார்கள்.

இந்தச் சூழலில் அமர் குழுவினரின் ரகசிய விசாரணை சந்தனத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதனால் கொலையாளிகளின் அடுத்த இலக்கைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் சந்தனத்துக்கும் ஏற்படுகிறது. அமரும் அவனுடைய குழுவினரும் கொலையாளிகளைக் கண்டுபிடித்தார்களா? இந்தக் கொலைகள் ஏன் நடக்கின்றன? கொலையாளிகளுக்கும் சந்தனத்தின் போதைப் பொருள் மாஃபியாவுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது ‘விக்ரம்’ படத்தின் மீதிக் கதை.

கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படம், இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கமல் முதன்முறையாகக் கைகோத்திருப்பது, ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் படத்தில் நடித்திருப்பது, சூர்யா கெளரவத் தோற்றத்தில் நடித்திருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் ’விக்ரம்’ வெளியானது. அதற்கேற்ப அசத்தலாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். சொல்லப்போனால், ஒரு மல்ட்டி ஸ்டாரர் ஆக்‌ஷன் படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று அனைவருக்கும் பாடம் எடுத்திருக்கிறார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் தன் ‘தலைவ’ருக்கு முதன்மை முக்கியத்துவம் அளித்திருக்கும் அதேசமயத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோருக்கும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை அமைத்திருக்கிறார். முதல் பாதியை ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம்தான் தாங்கி நிற்கிறது. முதல் பாதியில் கமல் திரையில் அதிகமாகத் தோன்றாவிட்டாலும் முதல் பாதி கமலின் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைந்திருக்கும். இரண்டாம் பாதியில் கமலுக்கே அதிகத் திரை நேரம். பிரதான வில்லனான விஜய் சேதுபதிக்கு இரண்டு பாதிகளிலும் முக்கியத்துவம் உள்ளது. இரண்டாம் பாதியிலும் ஃபகத் ஃபாசிலுக்கும் முக்கியமான சில காட்சிகளை வைத்து மூவரின் ரசிகர்களுக்கும் நிறைவளித்துவிட்டார் லோகேஷ். அதோடு நரேன், காயத்ரி ஷங்கர், காளிதாஸ் ஜெயராம், ஏஜென்ட் டினாவாக நடித்திருக்கும் பெண் என துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான சில தருணங்களைக் கொடுத்திருக்கிறார்.

பல கதாபாத்திரங்கள், கிளைக் கதைகளை உள்ளடக்கி அதைக் குழப்பமில்லாமல் சொல்லியிருப்பதே மிகப் பெரிய வெற்றி. லோகேஷின் திரைக்கதையும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பும் அதைச் சாதித்திருக்கின்றன. படம் சற்று தொய்வடைவதுபோல் தோன்றத் தொடங்கும்போதெல்லாம் ஒரு ஆச்சரியப் பரிசைக் கொடுத்து அசத்திவிடுகிறார் லோகேஷ். கதாபாத்திரங்களின் அறியப்படாத பின்னணி, கதாபாத்திரங்கள் சிலவற்றின் உருமாற்றம், நாம் நினைத்தது ஒன்றாக இருக்க உண்மையில் நடந்தது வேறொன்றாக இருப்பது போன்ற திரைக்கதைத் திருப்பங்கள் எனப் பல வகைகளில் ஆச்சரிய தருணங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

அண்டர்கவர் ஏஜென்ட் கதையாக கமல் நடித்து 1986-ல் வெளியான ‘விக்ரம்’, போதைப் பொருள் மாஃபியாவை வைத்து லோகேஷ் இயக்கிய ‘கைதி’ ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக சில கதைத் தருணங்களையும் கதாபாத்திரங்களையும் இந்தப் படத்திலும் சேர்த்திருப்பது படத்தை மேலும் ரசிக்கவைக்கிறது. இப்படிப்பட்ட முயற்சி தமிழுக்கும் புதியது.

ஆக்‌ஷன் படம் என்பதால் அதற்கேயுரிய லாஜிக் மீறல்களும் படத்தில் இருக்கின்றன. ஃபகத் ஃபாசில் குழுவினரும் சரி, கமலும் சரி சாதாரண மனிதர்களுக்கு இயலாத பல விஷயங்களைச் செய்கிறார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் அவர்களின் கதாபாத்திரத்தின் பின்னணியைக் கொண்டு ஓரளவு நியாயப்படுத்திக்கொள்ள முடிகிறது. என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவை தர்க்கப் பிழைகளாக உறுத்தத் தொடங்கி விடுகின்றன. குறிப்பாக, கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் இந்த உறுத்தல் தருணங்கள் நிறையவே உள்ளன.

என்னதான் சுவாரசிய தருணங்களும் ஆச்சரியங்களும் இருந்தாலும் படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீள்வது சற்று அலுப்பூட்டவே செய்கிறது. அதோடு என்னதான் போதைப் பொருள் மாஃபியாவுக்கும் அதை எதிர்க்கும் சமூகப் பொறுப்புமிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான போர்தான் படம் என்றாலும் கத்தியால் கழுத்தை அறுப்பது உள்ளிட்ட அப்பட்டமான வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

’பத்தல பத்தல’ என்று பாடி ஆடுவதாகட்டும், ஹீரோயிச காட்சிகளில் வியக்க வைக்கும் ஆளுமையை வெளிப்படுத்துவதாகட்டும், சென்னைத் தமிழ் பேசி எதிரிகளை நக்கலடிப்பதாகட்டும், எமோஷனல் காட்சிகளில் கண்களிலேயே அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகட்டும் கமலை முழு ஃபார்மில் மீண்டும் திரையில் பார்த்த திருப்தி கிடைக்கிறது.

ஃபகத் ஃபாசில் வீரமும், விவேகமும் சமூகப் பொறுப்புணர்வும் மிக்க அண்டர்கவர் ஏஜென்டாகவே மாறிவிட்டார். கொடூரக் கொலைகளைச் செய்வது, தங்கப் பல்லைச் சரியாகப் பொருத்திக்கொண்டே பேசுவது, போதைப்பொருள் உட்கொண்டு வீறுகொண்டு எழுந்து எதிரிகளை அடித்துத் துவைப்பது குடும்பத்தின் பாதுகாப்புக்காகப் பதறுவது என விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக அதிரடி காண்பித்துள்ளார். ஒரே ஒரு காட்சியில் வரும் சூர்யா தன் நடிப்பாலும் திரை ஆளுமையாலும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். அனிருத்தின் பாடல்கள் பொருத்தமான இடங்களில் அளவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. பெரிதும் இரவு நேரக் காட்சி, வேகமான காட்சி மாற்றம் ஆகியவற்றால் நிரம்பிய கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு கண்களுக்குச் சிரமம் வைக்காமல் இருந்ததே பாராட்டுக்குரியதுதான்.

மொத்தத்தில் சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ‘விக்ரம்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in