‘விக்ரம்’ படப்பிடிப்பில் மாற்றம்- ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?

‘விக்ரம்’ படப்பிடிப்பில் மாற்றம்- ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?

கமலுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அவர் தொகுத்து வழங்கிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தற்காலிகமாக அவருக்குப் பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும், அவர் நடித்துவரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ‘விக்ரம்’ திரைப்படத்தைத் தயாரித்துவருகிறது. விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாகவும் மேலும் சிலரும் வில்லன்களாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. கமலும் அவரும் மோதும் இறுதிக் காட்சியைப் படமாக்குவதற்காகப் பொள்ளாச்சியில் பிரமாண்ட சிதிலமடைந்த கார்கள் நிரம்பிய அரங்கை அமைத்திருந்தனர். அதன் பணிகள் ஏறக்குறைய முடிந்த நிலையில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது அதே செட்டை சென்னைக்கு மாற்றுகின்றனர். சென்னையிலுள்ள பின்னி மில்லில் அந்த சண்டைக் காட்சிகளைப் படமாக்கப்படுவதற்குத் தயார்நிலையில் படக்குழு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கமலின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருக்கும் நிலையில், பூரண குணமடைந்ததும், சிறிய ஓய்வுக்குப் பிறகு படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in