சூர்யாவின் `24’ படத்தின் 2-ம் பாகம்: இயக்குநர் புது தகவல்

சூர்யாவின் `24’ படத்தின் 2-ம் பாகம்: இயக்குநர் புது தகவல்

சூர்யா நடித்த அந்தப் பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் '24'. 2டி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது. அப்போதே, இந்தப் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அப்போது பேசிய இயக்குநர் விக்ரம் குமார், " '24' படம் பண்ணும் போதே, 2-ம் பாகம் குறித்து யோசிக்கச் சொன்னார் நடிகர் சூர்யா. அதற்கு வலுவான கதை வேண்டும். '24' படத்தின் 2-ம் பாகத்துக்காக நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கண்டிப்பாக ’24’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இப்போது கூறியுள்ளார். நாக சைதன்யா, ராசி கண்ணா நடிப்பில் ’தேங்க் யூ’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் விக்ரம் குமார். இந்தப் படம் வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் விக்ரம் குமார், ’’ ’24’ படத்துக்கான இரண்டாம் பாகக் கதையை நான்கு, ஐந்து பக்கங்கள் எழுதி வைத்துள்ளேன். ஆனால், அது செல்லும் திசை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் கதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறேன். கிடைத்ததும் சந்தேகமே இல்லாமல் உருவாக்குவேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in