
சென்னையில் நள்ளிரவில் விக்ரம் பட நடிகரிடம் செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் 12-வது தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் நடிகர் இளங்கோ குமரவேல்(57). இவர் அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், மொழி, பொன்னியின் செல்வன், உள்ளிட்ட திரைப் படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். நேற்று நடிகர் இளங்கோ திரைப்பட பணிகள் தொடர்பாக எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுவிட்டு, நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளார்.
அம்பேத்கர் மணிமண்டபம் அருகே நடந்து வரும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குமரவேல் கையில் இருந்து செல்போனை பறித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். செல்போன் பறிப்பு தொடர்பாக நடிகர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் பட்டினம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.