#விஜய்68: அட்லீ உடன் அணி சேரும் பான் இந்தியா படம்!

அரசியல் நெருக்கடிக்கும் பதிலடி தர முடிவு
#விஜய்68: அட்லீ உடன் அணி சேரும் பான் இந்தியா படம்!

இயக்குநர் அட்லீ இல்ல விழாவில் விஜய் பங்கேற்றதை தொடர்ந்து, விஜயின் 68வது திரைப்படம் அட்லீ இயக்கத்தில் உருவாகும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அட்லீ - ப்ரியா தம்பதி அடுத்த வருடம் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அண்மையில் அறிவித்தனர். எட்டாண்டு இல்லற வாழ்க்கையின் முதல் குழந்தைப்பேறு என்பதால் அட்லீ குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அவர்களின் மகிழ்ச்சியில் நடிகர் விஜயும் நேற்று பங்கேற்றார்.

ப்ரியாவுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றது அந்த விழாவுக்கு நட்சத்திர அடையாளம் கொடுத்திருக்கிறது. கூடவே அட்லீ - விஜய் இடையிலான அடுத்தபடத்துக்கான பேச்சுவார்த்தைகள் உறுதியாகி இருப்பதையும் காட்டியது.

வாரிசு திரைப்பட வெளியீடு தொடர்பான உளைச்சலில் ஆழ்ந்திருக்கும் விஜய், அட்லீ இல்ல விழாவில் மிகவும் உற்சாகத்தோடு பங்கேற்று அட்லீ - தம்பதியரை வாழ்த்தினார். அந்த புகைப்படங்கள் வெளியானபோது, அட்லீ - விஜய் கூட்டணி அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கும் தகவல்களை திரையுலகினரும் அதிகாரபூர்வமற்ற வகையில் உறுதி செய்தனர்.

இயக்குநர் ஷங்கரின் பிரதான சீடராக வளர்ந்து, இயக்குநராக பரிணமித்த அட்லீ இதுவரை 4 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். ஆர்யா, ஜெய், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பிலான ’ராஜா ராணி’யை தொடர்ந்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களும் விஜயுடன் அமைந்திருந்தது. கமர்ஷியல் கலவையில் எக்ஸ்பர்டான அட்லீ, விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் ஹீரோவுக்கான பிம்பத்தை செதுக்குவதிலும் வித்தகர் என்பதை நிரூபித்திருக்கிறார். தற்போதுள்ள நெருக்கடியில் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய விஜயை மீண்டும் திரையில் பிரதிபலிக்க விஜய்க்கு அட்லீ தேவையாகிறார். இந்தியில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் ’ஜவான்’ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய்68 படத்தை இயக்க அட்லீ வருகிறார்.

பொங்கலுக்கு ‘வாரிசு’ வெளியாக உள்ள சூழலில் அடுத்த #விஜய்67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்குவதாக இருக்கிறது. இவ்வாறு விஜய்67 படம் தொடங்குவதற்கு முன்னரே, அட்லீயுடனான கூட்டணியில் விஜய்68 அணி திரண்டிருப்பதற்கு, திரையுலகிலும், அரசியலிலும் தற்போது விஜய் எதிர்கொண்டிருக்கும் சங்கடங்களும் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்துக்கு வெளியே தெலுங்கிலும் கால் பதிக்கும் உந்துதலிலும், முதல் முறையாக ரஜினிகாந்த் ஊதியத்தை மிஞ்சும் வாய்ப்பு கிடைத்ததிலும், தெலுங்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியில் வாரிசு படத்தை ஒப்புக்கொண்டார் விஜய். ஆனால் அதற்கு பரிசாக தெலுங்கில் ஒத்துழையாமையும், தமிழில் புகைச்சலும் அதிகரித்தன. குறிப்பாக வாரிசுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்படுவதில் எழுந்த பிரச்சினைகள் அவருக்கு தர்மசங்கடம் தந்தன.

மாஸ் ஹீரோ படங்களை பொறுத்தவரை, ஓபனிங் சரியாக அமையாது போனால் ஒட்டுமொத்தமாக படத்தின் வணிகம் குப்புறத்தள்ளவும் செய்துவிடும். தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வெளியீட்டுக்கும் அதிகம் மெனக்கிடும் விஜய், அம்மாதிரி ரிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. இந்த வகையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த விஜய்68 படமும், தற்போது விஜய் தலையீட்டின் பெயரில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அரவணைப்பில் விஜய் கூட்டு சேர்வது வழக்கமான பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, தற்போதைக்கு விஜயை நெருக்கும் அரசியல் சூழலை சமயோசிதமாக எதிர்கொள்ளவும் உதவும் என்று கணித்திருக்கிறார்கள். அட்லீ உடனான புதிய படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான மசாலாக்களோடு, அரசியல் களத்துக்கான விஜயின் பதில்கள் சிலவற்றையும் ஆங்காங்கே தூவ சித்தமாக இருக்கிறார்கள்.

கரோனா காலத்துக்குப் பின்னர் பான் இந்திய திரைப்படங்கள் புதிய எழுச்சி பெற்றிருப்பதன் வரிசையில், விஜய்69 படத்தையும் பான் இந்திய வகைமையின் உரிய உள்ளடக்கத்தோடு வெளியிட அட்லீ - விஜய் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. இதற்கேற்ப சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் திரைப்படங்களின் வரிசையில் விஜய்68 படத்தையும், இதுவரையில்லாத பொருட்செலவில் பிரம்மாணடமாக எடுக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்த வகையில் விஜயின் வாரிசு வெளியீடு, அதற்கடுத்த விஜய்67 படப்பிடிப்பு தொடக்கம் ஆகியவற்றுக்கு முன்னரே, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புக்கு வித்திட்டிருக்கிறது விஜய்68.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in