‘பீஸ்ட்’ முதல் நாள் வசூலை மிஞ்சுமா 'வாரிசு’?

‘பீஸ்ட்’ முதல் நாள் வசூலை மிஞ்சுமா 'வாரிசு’?

பீஸ்ட் முதல் நாள் வசூலை, வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் மிஞ்சுமா என்பதே விஜய் ரசிகர் மன்றங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதாக உள்ளது. இதன் பின்னணியில் வாரிசுக்கான பாக்ஸ் ஆபிஸ் கவலைகளும் அடங்கியிருக்கின்றன.

விஜய்யின் முந்தைய திரைப்படம் ’பீஸ்ட்’. இதன் முதல் நாள் வசூல் தனி சாதனை படைத்த நிலையில், அடுத்து வெளியாகவிருக்கும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்புகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. முதல் நாள் வசூல் என்பது படத்தின் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலுக்கு முரசறையும் என்பதால், வாரிசு முதல் நாள் வசூல் குறித்த கவலைகளில் இப்போதே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆழ்ந்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இதுவரை ’ரஞ்சிதமே’ மற்றும் ’தீ’ என 2 பாடல்கள் வாரிசு படத்திலிருந்து வெளியாகி உள்ளன. ஆனபோதும் பீஸ்ட் படத்துக்கான எதிர்பார்ப்பு வாரிசுக்கு இல்லை என்று எழுந்த விமர்சனங்களை அடுத்து, வாரிசு புரமோஷன் குழுவினர் தீயாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் டிசம்பர் இறுது வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக, ஜன.1 அன்று வாரிசு ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக தெரிய வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தெலுங்கு வாரிசுக்கான சிக்கல், தெலங்கனா முதல்வருடன் சந்திப்பு, தமிழகத்தில் தியேட்டர் ஒதுக்கீட்டில் பின்தங்கியது என விஜய் உடனான சர்ச்சை விவகாரங்கள் நீள்கின்றன. ஆனபோதும் சர்ச்சைகளை தவிர்க்க, ஆடியோ லாஞ்சில் விஜய் அமைதி காக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அடுத்தபடியாக, முன்சொன்ன முதல் நாள் வசூல் இலக்குகள் வருகின்றன. அதிகாலை 4 மற்றும் காலை 8 மணி காட்சிகள் மட்டுமன்றி, அதிகாலை 1 மணி காட்சிக்கும் வாரிசுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக டிக்கெட் தயாரிப்புகளும் பரபரத்து வருகின்றன. வெறுமனே விஜய் ரசிகர்கள் மத்தியிலான வரவேற்பாக இல்லாது, முதல் நாள் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

படத்துக்கான முதல் நாள் வரவேற்பில் தொய்வு தென்பட்டால் அது ஒட்டுமொத்தமாக படத்துக்கான ஓபனிங்கை சரித்துவிடும் என்ற கவலையே இதற்கு காரணம். அந்த வகையில் முந்தைய வெளியீடான பீஸ்ட் முதல் நாள் வசூலை வாரிசு மிஞ்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பீஸ்டைவிட அஜித்தின் துணிவு படத்துக்கான முதல் நாள் வசூலை மிஞ்ச வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் அல்டிமேட் இலக்காக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in