
ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து நடிகர் விஜய்சேதுபதி பேசியுள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது பாலிவுட் படங்களில் நடிகர் ஷாருக்கானுடன் நடித்து வரக்கூடிய ‘ஜவான்’ திரைப்படமும் ஒன்று. அட்லி இயக்கத்தில் இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், ``கடந்த வருடம் நடந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஷாருக்கானை நேரில் சந்தித்தபோது அவருடன் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். விரைவில் ‘ஜவான்’ படத்தில் நடிப்பீர்கள் என நம்பிக்கை தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே அந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால், என்னை அன்புடன் ஷாருக்கான் கவனித்துக் கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் கரீனா கபூருடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘ஃபார்ஸி’ இணையத்தொடர் ஆகியவை அவரது கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.