ஸ்டூடியோவுக்கு சீல்: விஜய் சேதுபதி பட ஷூட்டிங் மாற்றம்

ஸ்டூடியோவுக்கு சீல்: விஜய் சேதுபதி பட ஷூட்டிங் மாற்றம்

சினிமா படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவுக்கு சீல் வைக்கப்பட்டதால், விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடிக்கும் இந்திப் படம் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். இவர், அந்தாதுன், ஏஜென்ட் வினோத், பத்லாபூர் உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர். 'அந்தாதுன்', தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்போது விஜய் சேதுபதி, ஸ்ரீராம் ராகவன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கேத்ரினா, ’இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் பணிபுரிவதை எப்போதும் விரும்புவேன். த்ரில்லர் கதைகளைச் சொல்வதில் அவர் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என்று கூறியிருந்தார். இதில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கேத்ரினா கைஃப்
கேத்ரினா கைஃப்

இந்தப் படத்துக்காக, மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் செட் போடப்பட்டு இருந்தது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன், ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கும் படத்துக்காக போடப்பட்ட அரங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து சித்ரகூட் படப்பிடிப்புத் தளத்துக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

இதனால், விஜய் சேதுபதி நடிக்கும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப் பிடிப்புக்காக போடப்பட்ட செட்டை கலைத்துவிட்டனர். இப்போது வேறு இடத்தில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக, அதன் தயாரிப்பாளர் ரமேஷ் தவ்ராணி ( Ramesh Taurani) தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பிருந்தாவன் ஸ்டூடியோவில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in