
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தி மற்றும் தமிழில் உருவான ’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம், 2024 பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களுடன் மோத இருக்கிறது.
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் தயாரான திரைப்படம் ’மெரி கிறிஸ்துமஸ்’. பெயரில் கிறிஸ்துமஸ் இருந்ததால், கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கே திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. எதிர்பாரா காரணங்களினால் அது தள்ளிப்போய், பின்னர் 2023 கிறிஸ்துமஸ் வெளியீட்டை குறிவைத்தது.
ஆனால் கிறிஸ்துமஸ் வெளியீடாக ஷாருக்கான், பிரபாஸ் என வடக்கு மற்றும் தெற்கின் மெக பட்ஜெட் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவதால், மீண்டும் வெளியீட்டு தேதியை மெரி கிறிஸ்துமஸ் மாற்றிக்கொண்டது.
பான் இந்தியா நடிகராக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதி தென்னக திரைப்படங்கள் மட்டுமன்றி பாலிவுட்டின் சினிமா மற்றும் ஓடிடி வலைத்தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் அமேசான் பிரைமில் வெளியான ’ஃபார்ஸி’ தொடர் விஜய் சேதுபதியை ஓடிடி தளத்தில் அடியெடுக்க செய்தது.
மேலும் சினிமாவில் துவண்டிருந்த இந்தி நடிகர் ஷாகித் கபூருக்கும் இந்த வலைத்தொடர் திருப்பு முனையானது. தற்போது ஐஎம்டிபி தளத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட இந்திய வலைத்தொடராக ஃபார்ஸி இடம்பெற்றுள்ளது. மேலும், ஷாருக்கானின் ஜவான் வாயிலாக பாலிவுட்டில் காலடி வைத்த விஜய் சேதுபதியின் அடுத்த படமாக மெரி கிறிஸ்துமஸ்ஸ் வெளியாக இருக்கிறது.
எதிர்பார்ப்புக்குரிய ’மெரி கிறிஸ்துமஸ்’ த்ரில்லர் திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். 2018-ம் ஆண்டு வெளியான ’அந்தாதூன்’ திரைப்படத்தை அடுத்து, அவர் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஆயுஸ்மான் குரானா, தபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் வசூலில் வாரிக்குவித்தது. தொடர்ந்து தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் உருவானது.
படத்தின் இயக்குனரை முன்னிறுத்தியும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட் தாரகை கத்ரீனா கைஃப் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கடந்த ஓராண்டு காலமாக வெளியீட்டு தினங்கள் மாற்றியமைக்கப்பட்டு, நீண்ட இழுபறியில் இருந்த மெரி கிறிஸ்துமஸ் ஒரு வழியாக தனது வெளியீட்டு தேதியை பொங்கலுக்கு இறுதி செய்துள்ளது. மெரி கிறிஸ்துமஸ் தமிழ் - இந்தி திரைப்படம், எதிர்வரும் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!
பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!
வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!