`வச்சு செய்வாங்க லோகேஷ் என்றேன், மறுத்துவிட்டார்'- 'விக்ரம்' படத்தில் அறிமுக காட்சி குறித்து விஜய்சேதுபதி ஷேரிங்

`வச்சு செய்வாங்க லோகேஷ் என்றேன், மறுத்துவிட்டார்'- 'விக்ரம்' படத்தில் அறிமுக காட்சி குறித்து விஜய்சேதுபதி ஷேரிங்

நடிகர் விஜய் சேதுபதி 'விக்ரம்' படத்தில் நடித்தது, உடல் எடை கூடிய வெறும் உடலோடு அறிமுக காட்சி வைக்க சம்மதித்தது, இந்த படத்தில் மட்டும் நடிப்புக்கு தனி ட்ரைய்னர் வைத்தது ஆகியவை குறித்து யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதில் சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருப்பார்.

படத்தில் இவரது அறிமுக காட்சியே சட்டை கழற்றி எடை கூடிய வெறும் உடலை க்ளோஸ்-அப்பில் காட்டியபடி தான் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சி வைக்க சம்மதித்தது குறித்து அவர் மனம் திறந்திருக்கிறார், "எந்தவொரு அறிமுக நடிகர்கூட நடிக்க தயங்கும் காட்சி அது என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. எல்லாமே இயக்குநருடைய முடிவுதான். எல்லா கதாபாத்திரங்களும் நாம் நினைத்தபடியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் எனக்கு முதலில் பயமாகதான் இருந்தது. 'எல்லாரும் நிச்சயம் வச்சு செய்வாங்க லோகேஷ். பனியனாவது போட்டு கொள்கிறேன்' என்று அவரிடமும் சொன்னேன். ஆனால், அவர் மறுத்து விட்டார். இறுதியில் பெரும்பாலானோருக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. ரசிகர்கள் எதை எந்த நேரத்தில் எப்படி ஏற்று கொள்வார்கள் என்பது கணிக்கவே முடியாதது. ரசித்த மக்களுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.

அதே போல, நடிப்பிற்காக தேசிய விருது வரை வாங்கியுள்ள நடிகரான விஜய்சேதுபதி எதற்காக இந்த படத்தில் நடிப்பிற்கு என தனிப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டதற்கு, "நடிப்பு என்றால் எளிது என அனைவரும் நினைத்து கொள்கிறார்களா என தெரியவில்லை. ஆனால், அந்த இடத்திற்கு வந்தால் மட்டுமே அதன் முக்கியத்துவம் தெரியும். ஒவ்வொரு தொழிலுக்கும் எப்போதும் பயிற்சிகள் இருந்து கொண்டே இருக்கும்.

நான் தேசிய விருது வாங்கி இருக்கிறேன் என்றால், அந்த படத்தில் கூட்டு முயற்சியாக நடந்திருக்கிறது. அதற்காக நான் சிறந்த நடிகன் ஆகிவிட முடியாது. ஏற்கெனவே, முத்தையா முரளிதரன் படத்திற்காக பூஜாவிடம் பத்து நாட்கள் நடிப்பு பயிற்சி எடுத்தேன். அது பிடித்திருந்தது. பிறகு இந்தி படங்களில் நடிப்பதால் அதற்கான பயிற்சியும் அவரிடம் எடுக்கலாம் என பேசியிருந்தேன். அந்த சமயத்தில்தான் 'விக்ரம்' படத்திற்காக 'மாஸ்டர்' பவானி சாயல் சந்தனத்திடம் வந்துவிடக்கூடாது என லோகேஷ் சொன்னார். அதன் காரணமாகவே பூஜாவை சொன்னேன். லோகேஷூம் அதற்கு சம்மதித்தார்" என்றார் விஜய்சேதுபதி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in