சூர்யாவுக்கு வாட்ச், இயக்குநருக்கு கார், உங்களுக்கு?: விஜய் சேதுபதி சொன்ன பதில்

சூர்யாவுக்கு வாட்ச், இயக்குநருக்கு கார், உங்களுக்கு?: விஜய் சேதுபதி சொன்ன பதில்

"'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக நடிகர் கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்" என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், ’மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். 2019-ம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்தப்படம் கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. இப்போது வரும் 24 -ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் பற்றி பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இயக்குநர் சீனு ராமசாமி, ஒவ்வொரு படம் பண்ணும்போதும் ரெஃபரன்ஸ் எடுப்பார். இந்தப் படம் இப்படித்தான் இருக்கணும் என்று தெளிவாக இருப்பார். அதற்கான அவர் உழைப்பு அபாரமானது.

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி

அவருடைய உரையாடல்கள் ரொம்ப எளிமையாகவும், சிறப்பாகவும் இருக்கும். இந்தப் படம் ஓர் அற்புதமான சிந்தனையைச் சொல்கிறது. வாழ்க்கையைப் பேசுகிறது. இந்த மாதிரியான எளிமையான வாழ்க்கையை, உயிர்ப்புடன் திரையில் சொல்ல இப்போது யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் படத்தை 55 நாளில் எடுக்க முடிவு செய்து 37 நாட்களில் முடித்தோம்.

நான் அதிகம் மதிக்கிற நடிகை காயத்ரி. அவங்க திறமை இன்னும் வெளிப்படலைன்னு நினைக்கிறேன். ஒரு விஷயத்தை வெளிப்படுத்தறதுக்கு அவங்க எடுக்கிற மெனக்கிடல் அற்புதம். அவங்களோட ’விக்ரம்’ படத்துல நடிச்சேன். அதுல அவரை கொலை பண்ணினேன். அடுத்து ’மாமனிதன்’ ரிலீஸ் ஆகப் போகுது. இதுல ரெண்டு குழந்தைக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க. குடும்பத் தலைவியாகவே மாறியிருக்காங்க. அவங்க நல்ல இடத்துக்கு போவாங்கன்னு தெரியும். இன்னும் சிறப்பாக வரவேண்டிய நடிகை” என்றார்.

“விக்ரம் படத்தை இயக்கிய இயக்குநருக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு பைக், சூர்யாவுக்கு வாட்ச் ஆகியவற்றை கமல்ஹாசன் வழங்கினார். உங்களுக்கு என்ன தந்தார்?” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அவரோட நடிச்சதே பெரிய விஷயம். இதை நினைச்சுக்கூட பார்க்கவில்லை" என்று பளிச் பதிலளித்தார் விஜய் சேதுபதி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in