விஜய் ரசிகர்களால் 'பீஸ்ட்' படத்திற்கு கிளம்பியது எதிர்ப்பு!

காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 விஜய் ரசிகர்களால்  'பீஸ்ட்' படத்திற்கு கிளம்பியது எதிர்ப்பு!

திருநெல்வேலி ராம் திரையரங்கில் விஜய் ரசிகர்கள், இருக்கைகளை அடித்து உடைத்துள்ள நிகழ்வு அதிர்ச்சியளிப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக, இந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியான நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள், திரையரங்க இருக்கைகளை அடித்து உடைத்துள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது. பொறுப்பற்றத் தன்மையோடு வன்முறைச் செயலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனமானச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

டிரைலர் வெளியீட்டின் போதே, விஜய் ரசிகர்கள் வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளதைக் காணும்போது, அப்படம் வெளியாகும் போது தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் என்ன நடக்குமோ? என்கிற அச்ச உணர்வே மேலோங்குகிறது. மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு நடிகர் விஜய் ரசிகர்கள் மோதல் போக்கைக் கடைபிடித்து அதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகுவதற்கான சூழல் இருப்பதையும் இந்நிகழ்வு உணர்த்துகிறது.

எனவே, ஏப்ரல் 13-ம் தேதியன்று தமிழகத்தில் வெளியாக இருக்கும் 'பீஸ்ட்' பட வெளியீட்டின் போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஏப்ரல் 13-ம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் அத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடவும், திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நடிகரின் நூறடிக்கும் மேலான கட்அவுட்டுகள் மீதேறி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதால் அவர்கள் கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதோடு, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால் கட்அவுட்டுகள் வைக்கவும், அதன் மீதேறி பாலாபிஷேகம் செய்து பாலை வீணடிக்கவும் நிரந்தரமாகத் தடை விதிப்பதோடு, காவல்துறையின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வன்முறைச் செயலில் ஈடுபடும் ரசிகர்கள் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in