விஜய் வீட்டு வாசலில் தவமிருந்த பள்ளி மாணவி; கண்காணிப்பு கேமராவில் கண்ணீருடன் கோரிக்கை!

விஜய் வீட்டு வாயிலில் கண்காணிப்பு கேமரா முன்பாக ரசிகையின் கோரிக்கை
விஜய் வீட்டு வாயிலில் கண்காணிப்பு கேமரா முன்பாக ரசிகையின் கோரிக்கை

விஜய் ரசிகையான பள்ளி மாணவி ஒருவர், இன்று சென்னையில் உள்ள விஜய் வீட்டின் முன்பாக கண்ணீர் மல்க வைத்த கோரிக்கை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒன்று விஜயை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்தது. அதனை அடுத்து, வீடியோ அழைப்பு மூலமாக அந்த குழந்தையின் மழலையை கேட்டு மகிழ்ந்தார் விஜய். இந்த வரிசையில் விஜயின் நீலாங்கரை வீட்டுக்கே நேரில் சென்ற 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், விஜய்க்காக அவரது வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் உருக்கமான கோரிக்கையும் வைத்தார். இதனை அந்த மாணவியின் குடும்பத்தினரே வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி உள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த பானிபூரி வியாபரம் செய்யும் பெற்றோரின் மகளான அந்த மாணவி, தற்போது 11ஆம் வகுப்பு தேர்வெழுதி முடித்திருக்கிறார். விடுமுறையை கழிக்கும் முகமாக சென்னையில் பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் உலா வந்தார். அந்த மாணவி மட்டுமன்றி, குடும்பத்தினர் அனைவரும் விஜயின் ரசிகர்கள் என்பதால், ஆர்வத்துடன் நீலாங்கரையில் இருக்கும் விஜய் வீட்டுக்கு வந்தனர்.

அங்கேயே சற்று நேரம் காத்திருந்தனர். அரண்மனை மதில் போன்றிருந்த விஜய் வீட்டின் வாசல் கதவு அவர்களுக்காக மனமிறங்கவில்லை. இதனை அடுத்து தனது வருகையின் நோக்கத்தை விஜய் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமரா முன்பாக அந்த சிறுமி உருக்கமாக பேசினார். ”தளபதியை பார்க்கணும்னு வீடு வரை வந்தோம். ஆனா உங்களை பார்க்க முடியலை. நாங்க காஞ்சிபுரத்திலிருந்து வருகிறோம். இதை பார்த்ததும் எப்படியாவது விஜய் அண்ணா கட்டாயம் எங்களை கூப்பிடுங்க. உங்களை பார்க்கணும்.. ஒரேயொரு போட்டோ எடுக்கணும்.. அவ்வளவுதான்” என்றபோது அந்த மாணவி கண் கலங்கினார். மேலும் விஜய் பார்வைக்கு செல்லும்வரை வீடியோவை பகிருங்கள் என்று கோரிக்கையும் வைக்கிறார்.

அத்தோடு வீட்டு வாயிலை தொட்டு கும்பிட்டவர், மதில் கதவை அணைத்தும் உருகி இருக்கிறார். உச்ச நட்சத்திரங்களின் வெற்றியை சாத்தியமாக்கும் இளம் ரசிகர்களின் மனோபாவம் குறித்து, ஒரு சோறு பதமாக இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் காஞ்சிபுரம் மாணவியை வரவழைத்து, விஜய் தரிசனமும், செல்ஃபியும் அருள்வார் என்று நம்பலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in