விஜய் ரசிகரின் தற்கொலை அறிவிப்பு: காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

விஜய் ரசிகரின் தற்கொலை அறிவிப்பு: காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

ட்விட்டரில் பகிரங்கமாக யாசகம் கேட்டு எவரும் உதவாததால் தற்கொலை முடிவை அறிவித்த விஜய் ரசிகருக்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் உடனடி உதவிக் கரம் நீட்டியிருக்கிறார். இதனையடுத்து பல்வேறு பணத்தேவைகளுக்காக ஜிவிபி-யை பலரும் ட்விட்டரில் நெருக்கி வருகின்றனர்.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் பயன்பாடு, முன்னெப்போதையும்விட இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, ரசனை சார்ந்த சிலாகிப்புகள், சர்ச்சைகள் மட்டுமின்றி தனிப்பட்ட உதவிகளுக்காகவும் ட்விட்டர் கணக்கை பயன்படுத்துவோர் அதிகம். வேலை தேடும் இளைஞர்கள், திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும் புதியவர்கள் உள்ளிட்டோர் ட்விட்டர் வாயிலாகவே உரியவர்களை பின்தொடர்வதும், வாய்ப்பு கேட்பதும் நடக்கிறது. தொலைத்தொடர்பு, போக்குவரத்து, காவல்துறை, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு துறைகளை ட்விட்டர் மூலமாகவே தொடர்பு கொள்வதும், கோரிக்கையை தெரிவித்து உரிய நிவாரணம் பெறுவதும் ட்விட்டரில் எளிதாகி வருகிறது.

இந்த பாஸிடிவ் பக்கத்துக்கு அப்பால் நிழலான காரியங்களை நிகழ்த்துவோரும், பயனர்களை நம்ப வைத்து ஏமாற்றுவோரும் இங்கே அதிகம். போலி கணக்குகளைத் தொடங்கி நம்பும்படியான பதிவுகளை இடுவதும், எதிர்பாலினத்தவரை ஈர்த்து மோசடி செய்வது ட்விட்டரில் இடறும் மோசடிகளில் முக்கியமானது. இந்த வகையில் அவரசம், ஆபத்து என சக பதிவர்களை நம்ப வைத்து பணம் பறிப்பவர்களும் உண்டு. இவர்களால் நிஜமான பிரச்சினை மற்றும் அவசரத் தேவைக்காக சமூக வலைதளத்தில் உடன் பழகியவர்களை நம்பி உதவி கேட்பவர்களும் அவமானத்துக்கு ஆளாவது நடக்கும். இப்படி உதவி கேட்பவர்களுக்கு பிரபலங்களில் ஒருசிலர் கைமாறு பாராது உதவுவதும் உண்டு. கரோனா இரண்டாம் அலை பரவலின் மத்தியில் பாலிவுட் நடிகரான சோனு சூட் செய்த உதவிகள் இவற்றுக்கு சிறந்த உதாரணம்.

இனி இன்று (ஜூலை 18) மாலை நடந்தேறிய ட்விட்டர் சம்பவத்துக்கு வருவோம். நடிகர் விஜய்யின் பரம ரசிகராக தன்னை முன்னிறுத்திய பதிவர் ஒருவர், கடந்த 2 தினங்களாக ட்விட்டர் வாயிலாக தன் பணப் பிரச்சினைகள் வெளியில் சொல்லி கதறி வருகிறார். புகழ் எனப்படும் அந்த இளைஞர் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும், இம்மாத தவணையை செலுத்துவதில் தேவையான தொகையை திரட்ட வழியின்றி திணறுவதாகவும் அவரது பதிவுகளின் அடிப்படையில் தெரிய வருகிறது. பணியாற்றும் இடம், பழகி இடம் என நிஜவுலகின் சகல திசைகளிலும் கடன் கேட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் பகிரங்கமாக கைமாற்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களின் கோர இலக்கணத்தின்படி சக பதிவர்கள் அனைவரும் கடன் கேட்ட பதிவரை கிண்டல் செய்தும், இகழ்ந்துமாய் அவரை மேலும் அழுத்தத்தில் தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அந்த விஜய் ரசிகர், சமூக வலைதளங்களின் இயல்பினை புரிந்திருந்தமையாலும் தனது அவலச் சூழல் காரணமாகவும், ’ப்ளீஸ் தர்மம் பண்ணுங்க..’ என்றபடி பகிரங்கமாய் யாசகம் கேட்டு கெஞ்சும் நிலைக்கு சென்றார்.

ஒரு கட்டத்தில் கடன் தொகை புரளவும் வழியின்றி, இழிவுகளும் சேர்ந்ததால் எலி விஷமருந்து சேகரிப்பை படமாக பகிர்ந்து ‘எனக்கு வேறு வழி தெரியவில்லை, கடைசி முயற்சி மேற்கொள்கிறேன்..’ என்று பதிவிட்டார். இதனை பார்த்ததும் ’விஜய் ரசிகை’ என்ற அடையாளத்துடன் ட்விட்டரில் இயங்கும் சக பதிவர் ஒருவர், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ட்விட்டர் வாயிலாக முறையிட்டார்.

உடனடியாக ஆன்லைனுக்கு வந்த ஜிவிபி, ’கூகுள் பே’ பணப்பரிமாற்றத்துக்காக அலைபேசி எண்ணைக் கோரினார். அதன்படி விஜய் ரசிகர் தனது எண்ணை தெரிவித்ததும் அதே சூட்டில் ’பணம் அனுப்பப்பட்டது’ என்று பதில் ஜிவிபியிடமிருந்து வந்தது. நெக்குருகிப்போன அந்த விஜய் ரசிகர் ஜிவிபிக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது ட்விட்டர் கணக்கின் முகப்பு சுய விவரக்குறிப்பில் விஜய் விசிறி என்பதற்கு அப்பால் ’எனக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள் ஜிவிபி அண்ணா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனது தற்கொலை அறிவிப்பு பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

கடன் தொல்லை காரணமாக தற்கொலை முயற்சி வரை விஜய் ரசிகர் சென்றதும், பகிரங்கமாய் யாசகம் கேட்டு அவமானப்பட்டதும், எதிர்பாராது ஜிவிபி உதவியதும் இன்று மாலை சடுதியில் நடந்து முடிந்தன. சிறிய தொகை என்றபோதும் எவருமே நம்பி உதவாதபோது, விஜய் ரசிகை கோரலுக்கு ஜிவிபி செவி சாய்த்ததை பலரும் விதந்தோதி வருகின்றனர்.

இந்த ட்விட்டர் புராணம் இத்துடன் முடியவில்லை. எங்கிருந்தோ புற்றீசல் போல படையெடுத்த இளம் பதிவர்கள், பகிரங்கமாய் ஜிவிபி-யிடம் உதவி கேட்டு வருகிறார்கள். ‘அண்ணா அரியர் கட்ட உதவுங்கள், ப்ளீஸ் சார் காலேஜ் பீஸ் கட்டணும், ப்ரோ அவசரத் தேவைக்கு அஞ்சாயிரம் கைமாத்து கிடைக்குமா’ என்றெல்லாம் ஜிவிபியை ஆன்லைனில் துரத்தி வருகின்றனர். இந்த பதிவுகளில் பெரும்பாலானவை வம்பு பதிவுகள் என்பதும் வெளிப்படையாக தெரிய வருகின்றன. எனவே அவற்றுக்கு ஜிவிபி தரப்பில் பதில் இல்லை.

அதே வேளை, அதுவரை கடன் கேட்டு அவமானப்பட்ட சக ரசிகரை கருணையின்றி கிண்டல் செய்து வந்த விஜய் ரசிகர்களும், இதர பதிவர்களும் தங்கள் வம்புகளை வாபஸ் வாங்கியவர்களாக தற்போது வாயடைத்துப் போயுள்ளனர். கடன் கேட்ட விஜய் ரசிகரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய இயலவில்லை. ஆனால் நிராதரவாய் பரிதவித்த விஜய் ரசிகருக்கு கேள்வியின்றி உதவி செய்த ஜிவிபி அமைதியாக தடம் பதித்து சென்றிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in