
விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத் இணையும் புதிய படம் மும்பையில் இன்று தொடங்கியது.
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா 'நேட்டோ' படம் மூலம் தமிழுக்கும் வந்த இவர், இப்போது ’லைகர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தி நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், புரி ஜெகநாத், விஜய் தேவரகொண்டா மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர். பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு ’ஜனகனமண’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருந்தனர். மலையாளத்தில் இதே தலைப்பில் படம் வெளியாக இருப்பதால், தலைப்பை ஜேஜிஎம் (JGM) என்று வைத்துள்ளனர்.
இந்தப் படத்தை நடிகை சார்மி, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, புரி ஜெகநாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். படம் மும்பையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 23-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படம்பற்றி புரி ஜெகநாத் கூறும்போது, ’இது வலுவான கதையையும் பிரம்மாண்டமான ஆக்ஷனையும் கொண்ட படம்’ என்று தெரிவித்துள்ளார்.