தியேட்டர் அதிபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தியேட்டர் அதிபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்:  வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிரபல தியேட்டர் அதிபரை நேரில் சந்தித்த நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்த ’லைகர்’படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தப் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு காரணமாகவே இந்தப் படம் தோல்வியை சந்தித்தது என்று மும்பை கெயிட்டி கேலக்ஸி, மராத்தா மந்திர் திரையரங்கங்களின் உரிமையாளர் மனோஜ் தேசாய் பரபரப்பு புகாரைத் தெரிவித்திருந்தார்.

’லைகர் படத்தை புறக்கணியுங்கள்’ என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் டிரெண்டானபோது, ‘பார்த்தால் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் பார்க்கவேண்டாம் என்றும் படத்தை யார் நிறுத்துவார்கள் என்று பார்ப்போம்’ என்றும் தெனாவட்டாகக் கூறியிருந்தார் விஜய் தேவரகொண்டா.

இதனால்தான் ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்றும், தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்றால் ஓடிடிக்கான படங்களில் நடியுங்கள் என்றும் மனோஜ் தேசாய் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னைத் திட்டிய தியேட்டர் அதிபர் மனோஜ் தேசாயை நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தான் உண்மையில் என்ன பேசினேன் என்று அவருக்கு விளக்கம் அளித்தார். இதுபற்றிய வீடியோவை மனோஜ் தேசாய் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘விஜய் தேவரகொண்டா பேசியதை முழுமையாக நான் பார்க்கவில்லை. பார்க்காமல்தான் பேசிவிட்டேன். அவர் நல்ல மனிதர். அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. சிறப்பானவர். அவர் படங்களைத் தொடர்ந்து எங்கள் தியேட்டர்களில் வெளியிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. சில நெட்டிசன்கள், ‘விஜய் தேவரகொண்டா பி.ஆர்.டீமின் மலிவான விளம்பரம் என்றும் இந்த சந்திப்பால், படத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது’ என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in