
பாலியல் வழக்கில் நடிகரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், விஜய்பாபு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். கொச்சி போலீஸார் அவர் பாஸ்போர்ட்டை முடக்கினர். அவர் சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், அவர் நேற்று கொச்சி திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்துள்ளனர். நீதி துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். பாலியல் வன்கொடுமை ஏதும் செய்யவில்லை. நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது. அடுத்தப் படத்தில் வாய்ப்பு வழங்காததால் அந்த நடிகை இவ்வாறு புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" என்றார். பின்னர் அவரிடம் போலீஸார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அவருடைய முன் ஜாமீன் மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது அரசு தரப்பில், போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று கூறினர். இதனால் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதுவரை விஜய் பாபுவை கைது செய்வதற்கான தடை தொடரும் என்றும் உத்தரவிட்டுள்ளது.