பாலியல் வழக்கு: தப்பியோடிய நடிகரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடிவு

பாலியல் வழக்கு: தப்பியோடிய நடிகரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடிவு

நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது மலையாள நடிகை ஒருவர் கொச்சி போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு துபாய்க்குத் தப்பியோடினார். மே 19-ம் தேதி போலீஸில் ஆஜராவதாக அவர் தகவல் தெரிவித்திருந்தார். சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.

இதனால், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு கொச்சி காவல் துறை பரிந்துரைத்தது. அதை ஏற்று அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது விசாவும் ரத்தாகும் என்பதால், ஐக்கிய அரபு அமீரக போலீஸார் அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்புவார்கள் என்று கொச்சி போலீஸார் நம்பினர்.

ஆனால், விஜய் பாபு துபாயில் இருந்து ஜார்ஜியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். ஜார்ஜியாவில் இந்தியத் தூதரகம் இல்லை என்பதால் அருகில் உள்ள அர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை கொச்சி போலீஸார் நாடியுள்ளனர். அதே நேரம் மே 24-ம் தேதிக்குள் அவர் சரணடையவில்லை என்றால் அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்து போலீஸார் சட்ட ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in