தமிழ் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!

தமிழ் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!

தமிழ் சினிமாவில், முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய். ’மாணிக்கம்’ படத்துக்காக அதைக் கொடுத்தவர் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. இதை அப்போது சூடாக பேசியது கூலான கோடம்பாக்கம். ஆனால், இன்று அப்படியில்லை. நூறு கோடியே சர்வசாதாரணமாகிவிட்டது என்கிறார்கள்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், விஜய், அஜித் வாங்கும் சம்பளம் பற்றிச் சாடினார். ’இவர்களே 90 சதவீதம் சம்பளத்தை வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும்?’ என்று கேட்டிருந்தார். தயாரிப்பாளர் கே.ராஜனும், பெரிய ஹீரோக்கள் நூறு கோடி கேட்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

சூர்யா, அஜித், விஜய்
சூர்யா, அஜித், விஜய்

இதையடுத்து, தமிழ் சினிமா ஹீரோக்களின் இப்போதைய சம்பளம் விவரம் பற்றி கோலிவுட்டில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. இதில் கொஞ்சம் ஐந்தோ, பத்தோ முன், பின் இருக்கலாம்!

நடிகர் விஜய் ’பீஸ்ட்’ படத்துக்கு வாங்கிய சம்பளம் ரூ.85 கோடியும் ஜி.எஸ்.டியும். இரண்டும் சேர்த்து ரூ.95 கோடி என்கிறார்கள். இப்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்துக்கு ரூ.110 கோடியும் ஜி.எஸ்.டியும். இதே போல, நடிகர் அஜித் ’வலிமை’ படத்துக்கு ரூ.60 கோடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் நடிக்கும் படத்துக்கு ரூ.80 கோடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். அடுத்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அஜித் சம்பளம் ரூ.106 கோடி என்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இவர்களுக்கு அடுத்து சூர்யா. பெரும்பாலும் சொந்தப் படங்களில் நடிப்பதால் மற்ற நிறுவனங்கள் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. பாண்டிராஜ் இயக்கிய ’எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு ரூ.25 கோடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். இப்போது ரூ.40 கோடி கேட்பதாக தகவல். நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம், ரூ.27 கோடியில் இருந்து ரூ.30 கோடி வரை.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

‘மாநாடு’ படத்துக்கு சிம்பு வாங்கிய சம்பளம் ரூ.8 கோடி. இப்போது நடிக்கும், வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்கள் முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டவை என்பதால் அந்தப் படங்களுக்கு அவருக்கான சம்பளம் குறைவுதான். ஆனால், அடுத்து அவர் ஒப்பந்தமாகப் போகும் படத்துக்கு கேட்கும் சம்பளம் ரூ.30 கோடி என்கிறார்கள்.

தனுஷ்
தனுஷ்

நடிகர் தனுஷ் ரூ.17 கோடியில் இருந்து ரூ.20 கோடி கேட்பதாவும் கார்த்தி ரூ.18 வரை கேட்பதாகவும் விஜய் சேதுபதி ரூ.10 கோடியில் இருந்து ரூ.14 கோடி கேட்பதாகவும் சொல்கிறார்கள் கோலிவுட்டில். இதற்கிடையே நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாக நடிக்க ரூ.6 கோடியும் வில்லனாக நடிக்க ரூ.8 கோடியும் தரம் பிரித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கோடம்பாக்கம் ஒருபுறம் இப்படி கோடிகளில் புழங்கிக் கொண்டிருக்க, படங்கள் ஓடாததால் நஷ்டத்தைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களின் கவலைப் பேச்சுகளையும் மறுபுறம் கேட்காமல் இருக்க முடியவில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in