விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண டீசரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண டீசரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

விக்னேஷ்சிவன் - நயன்தாரா திருமண டீசரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களது திருமண வீடியோ முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ்ஸில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களான ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, சூர்யா, ஜோதிகா, விஜய்சேதுபதி, இயக்குநர் மணிரத்தினம் என பலர் வந்து வாழ்த்திய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து, நெட்ஃபிலிக்ஸ் ஒப்பந்தத்தை மீறி இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டதால் இவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்புவதில் இருந்து நெட்ஃபிலிக்ஸ் பின்வாங்கியதாகவும் இதுமட்டுமல்லாமல், இந்த திருமண வீடியோ ஒளிபரப்பிற்காக இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு நெட்ஃபிலிக்ஸ் செலவு செய்த திருமண தொகையான 25 கோடியை திரும்ப கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து திருமண வீடியோ நெட்ஃபிலிக்ஸில் ஒளிபரப்பாகும் என்பதை உறுதி செய்யும் விதமாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் திருமணத்திற்கு பின்பு கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்.

இதனை அடுத்து தற்போது இவர்களது திருமண வீடியோவுக்கான ப்ரோமோ டீசரை நெட்ஃபிலிக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த டீசருக்கு Nayanthara: Beyond the Fairytale என்கிற டைட்டிலை வைத்துள்ளனர். இதில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு, மரியாதை மற்றும் தங்கள் காதல், திருமண வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொள்ளும்படி அந்த டீசர் இருக்கிறது.

அதில் நயன்தாரா பேசும் போது, ‘உங்களை சுற்றி உண்மையான அன்பு இருக்கும் போது அதை நீங்கள் உணர்வீர்கள்’ என்று கூறி இருக்கிறார். அதுவே விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றி கூறும் போது, ``அவருடைய இயல்பே எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதுமே ஒரு முன்மாதிரியான பெண்மணி. உள்ளேயும் வெளியேயும் அவர் எப்போதும் அழகு!’ என பேசியுள்ளார். விரைவில் இவர்களது திருமண வீடியோ வெளியீட்டிற்கான தேதியை நெட்ஃபிலிக்ஸ் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in