‘வலி இல்லாமல் காதல் இல்லை' - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

‘வலி இல்லாமல் காதல் இல்லை' - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் கரோனா சூழல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஒருவழியாக ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் நேரடியாக வெளியாக இருக்கிறது. அனிருத் இசையில் 'நான் பிழை', 'டூ ட்டூ', 'டிப்பம் டப்பம்' என அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன. விக்னேஷ் சிவன், நயன்தாராவின் 'ரெளடி பிக்சர்ஸ்' நிறுவனமே படத்தைத் தயாரித்துள்ளது.

ஒரே சமயத்தில் கண்மணி, கதிஜா என இரண்டு பேரிடம் காதலில் சிக்கிக்கொள்ளும் நாயகன் ரேம்போவின் கதைதான் இந்த படம். நேற்று ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

‘கா.வா.ரெ.கா’ வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் இப்படம் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில், 'ஒரு படத்தை உருவாக்குவதில் சிறந்தது என்றால் கடைசி ஐந்து நாட்களைச் சொல்வேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் அனிருத்துடன் வேலை செய்திருக்கிறேன். என்னுடைய கதையின் காட்சிகள் எப்படி சிறந்த நடிகர்களால் உருமாறி இருக்கிறது என்பதைப் பார்ப்பது வாழ்வின் சிறந்த ஒன்றாக நினைக்கிறேன். அந்த நாட்களில் நானும் வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய காதல், குழந்தையான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்துடன் கடைசி ஐந்து நாட்கள்!

நிறைய அன்பையும் காதலையும் இந்தப் படத்தில் கொடுத்துள்ளேன். படம் என்னிடம் இனி இருக்கப் போவதில்லை என்ற வலி ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. ஆனால், இது போன்ற வலிகள் உண்மையிலேயே மதிப்பு மிக்கது. ஏனெனில் வலி இல்லாமல் காதல் இல்லை' என்று நெகிழ்ச்சியாக எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும், ‘பான் இந்தியா திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு அக்மார்க் தமிழ் திரைப்படம் எங்களிடம் இருந்து நமக்காக' என மகிழ்ச்சியாக ஒரு ட்வீட்டும் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.