‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வசூல் நிலவரம்: சந்தோஷம் பகிரும் விக்னேஷ் சிவன்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வசூல் நிலவரம்: சந்தோஷம் பகிரும் விக்னேஷ் சிவன்

ஏப்ரல் மாத இறுதியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் 'ரெளடி பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் நேற்று ஓடிடியில் வெளியாகியிருக்கிறது,

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானதன் மூலம் 66 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் என மொத்தம் 24 கோடி ரூபாய்க்கு இந்தப் படம் வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் இசை உரிமத்தை சோனி 4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. இந்தி சாடிட்லைட் உரிமம் 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூல், வியாபாரம் மூலம் எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வெற்றி குறித்து விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், 'உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அனைவரும், எங்கள் வேலையை இந்தப் படத்தின் வெற்றின் மூலம் திருப்தியுள்ளதாக மாற்றியதற்கு நன்றி. அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு படத்தை எடுக்க விரும்பினோம். அந்த அன்பை நீங்கள் படத்தின் டிக்கெட் வாங்கி வெளிப்படுத்தி உள்ளீர்கள். அந்த அன்பிற்கு எப்போதும் நன்றி' என அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.

மகாபலிபுரத்தில் மணவிழா

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜூன் 9-ம் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் நடக்கும் என உறுதியாகியிருக்கிறது. முதலில் திருப்பதியில் நடப்பதாக இருந்த திருமணம் தற்போது மகாபலிபுரத்தில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள் உறவினர்கள் என நெருங்கிய நபர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

மேலும், அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளில் திருமணத்திற்குப் பின்பே பங்கேற்க உள்ளார் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பு அநேகமாக அடுத்த வருடம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in