
அஜித்துக்கான அடுத்த திரைப்படத்திலிருந்து திடீரென கழற்றிவிடப்பட்ட விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உதவியால் பதிலடி தர இருக்கிறார்.
துணிவு திரைப்படத்துக்கு அடுத்தபடியாக, அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இதனை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவனின் சமூக ஊடகப் பதிவுகளும் பறைசாற்றி வந்தன. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
விக்னேஷ் சிவனின் கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லை என்றும், தயாரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் சுமூகம் எட்டவில்லை என்றும் பல்வேறு விதமான தகவல்கள் கசிந்தன. வில்லனாக அரவிந்த் சாமி, முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் வளர்த்து வந்த நிலையில், அஜித்தின் புதிய படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டது பெரியளவில் பேச்சானது.
முக்கியமாக விக்னேஷ் சிவன் தரப்பில் சங்கடங்களையும் உருவாக்கியது. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக வெளியான செய்திகளும் விக்னேஷ் சிவனை அழுத்தத்தில் ஆழ்த்தின. எனவே, அஜித்துக்கு தயார் செய்த கதையில் சில மாற்றங்களை செய்து, மற்றொரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயவில், விஜய் சேதுபதியை வைத்து இயக்க விக்னேஷ் சிவன் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
முந்தைய திரைப்படங்களின் வாயிலாக இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதும் இதற்கு காரணம் காரணம் என்கிறார்கள். இந்த புதிய திரைப்படத்தை, அஜித்துக்கான பதிலடியாகவும் விக்னேஷ் சிவன் உருவாக்கப் போவதாகவும், மேலும் அதனை வெற்றிப்படமாக்கும் வேகத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களாக வலம்வந்த இந்த தகவல், தற்போது மேலும் உறுதியாகி உள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.