
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கான நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, “இந்த மாதிரியான படம் எடுப்பதில் எளிதான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதுதான். அடுத்த எளிதான விஷயம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்று நினைப்பது. இந்தப் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தது யாரும் சொல்லவில்லை. இப்படி ஒரு கதையை கொண்டு வர அது நாங்களே உருவாக்கிக் கொண்டது. ஆனால், இப்படியான கதையை ஆரம்பிக்கிறோம் என அறிவித்ததில் இருந்தே ஊடகங்கள், ரசிகர்கள் என பலரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்து ஆதரவு கொடுத்தார்கள். அதுதான் பெரிய விஷயம் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளது.
ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு இந்தக் கதையின் தீவிரம், கருப்பொருள், நாங்கள் பட்ட கஷ்டம் ஆகியவற்றை மட்டுமே மதிப்பிட்டு கிட்டத்தட்ட அனைத்து மீடியாக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது பெரிய விஷயம். மக்கள் இந்த கதையின் வலியை அவர்களுடையதாக எடுத்துக் கொண்டாடினார்கள். அது எங்களுடைய நன்றிக்குரியது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நன்றி. இந்தக் கதையில் நல்லவன் நாயகன். நல்லவனை நாயகனாகப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நல்லவனை கதைநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள்.
இந்தப் படத்தில் வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. அதையும் ஏற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கும் காத்திருப்பதாக சொன்ன அனைவருக்கும் நன்றி. இன்னும் இது போன்ற புதிய முக்கியமான கதைக்களங்களை சொல்வதற்கும் ஊக்கமாக இருக்கும். ரெட் ஜெயண்ட் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜா சார் படத்தப் பார்த்துவிட்டு ‘பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்’ என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார். ஏனெனில் நான் படத்தின் பின்னணி இசைக்கு குறைவான நேரத்தையே கொடுத்தேன். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார்.