‘விடுதலை1’: சினிமா விமர்சனம்!

‘விடுதலை1’
‘விடுதலை1’பட விமர்சனம்!

வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘விடுதலை1’ திரைப்படம் இன்று ரிலீஸ். எப்படி இருக்கிறது படம்?

அறுமபுரி என்ற கிராமத்தில் இருக்கும் கனிம வளங்களை எடுக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கிறது அரசாங்கம். மலைப்பகுதிகளில் இருக்கும் கனிம வளங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், அது தொடர்பாக மக்கள் மீது அவிழ்த்து விடப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் படை ஒன்று ஊருக்குள் உருவாகிறது. அந்த ஊருக்குக் காவலராக குமரேசன் (சூரி) வருகிறார். மக்கள் படைக்குத் தலைவராக இருக்கும் பெருமாள் என்கிற வாத்தியாரை (விஜய்சேதுபதி) பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக அமைகிறது.

இந்த நிலையில், எதிர்பாராத ஒருக்கட்டத்தில் குமரேசன் பெருமாள் வாத்தியாரை நேரில் பார்த்து விடுகிறார். அதை தன் மேலதிகாரிகளிடம் தெரிவிக்க அவர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். கடைசியில் வாத்தியாரை நேரடியாக பிடிக்கும் தருணம் குமரேசனுக்கு அமைகிறது. அது குமரேசனுக்கு எத்தகைய பாதிப்பை வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது, குமரேசன் ஏன் வாத்தியாரை காட்டிக் கொடுக்கிறார்? வாத்தியார் யார்? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘விடுதலை1’ படத்தின் கதை.

‘விடுதலை1’
‘விடுதலை1’

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையைத் தழுவி ’விடுதலை’யை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். 1987 காலகட்டத்தில் நடக்கிறது கதை. கரடுமுரடான மலைப்பாதைகள் நிறைந்த கிராமத்திற்கு காவல்துறையில் டிரைவராக வரக்கூடிய சூரி, அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்யவே காவல்துறை என்ற எண்ணம் உள்ள நபர்.

குமரேசன் கதாபாத்திரத்திற்காகவே வார்த்தெடுத்தது போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. அதேசமயத்தில் ‘தப்பு செய்யாதபோது எதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நேர்மையுடன் காவல்துறைக்குள் உலவுவது, ஊர் மக்களுக்கு இரக்க குணத்துடன் உதவுவது, போலீஸ் அதிகாரிக்கான உடல்மொழி, பவானியுடனான காதலில் மருகுவது என இதுநாள் வரைப் பார்த்திராத வேறொரு சூரியை ’விடுதலை1’ படத்தில் பார்க்கலாம்.

‘விடுதலை1’
‘விடுதலை1’

படத்தில் வாத்தியாராக, மக்கள் படைத்தலைவர் பெருமாளாக விஜய்சேதுபதி. முதல் பாகத்தில் குறைவான காட்சிகளே வருகிறார். கரடுமுரடான உடம்பு, ஷார்ப் வசனங்கள், மக்கள் படையுடன் காவல்துறையை எதிர்த்து சண்டையிடுவது, இரண்டாம் பாகத்திற்கான லீடில் காவல்துறை அதிகாரிகளுடன் பேசுவது என அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும், படத்தின் ஆரம்பத்திலிருந்து மக்கள்படை பற்றியும் அதில் வாத்தியாரின் முக்கியத்துவம் பற்றியும் மற்ற கதாபாத்திரங்களின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்திச் செல்கிறார்கள்.

அதிகாரவர்க்கத்தின் கோர முகங்களாக நடிகர்கள் கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். காவல்துறை மக்கள் மீது பிரயோகிக்கும் அதிகாரத்தைத் தட்டி கேட்கவும் முடியாமல், மக்கள் பக்கமும் நிற்கவும் முடியாமல் வலம் வரும் அதிகாரிகளாக தமிழ் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஊர்ப் பெண்ணாக வரும் பவானிஸ்ரீ நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கும் சூரிக்கும் இடையேயான காதலில் அவ்வளவு அடர்த்தி. காவல்துறையால்தான் தன் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிந்தும், ”போலீஸ்கிட்ட பேசினாலே எங்க ஊர்ல அசிங்கமா பார்ப்பாங்க” எனச் சொல்லிக் கொண்டே, “மனிதர்கள் மீது உள்ள நம்பிக்கை” என சூரியுடன் காதலில் மருகும் அவர், ‘தமிழரசி’ கதாபாத்திரத்தில் தனித்துத் தெரிகிறார்.

இளையராஜா இசையில் ’காட்டுமல்லி’யும், ’ஒன்னோட நடந்தா’ பாடலும் தாலாட்டுகிறது. 80’களின் காலக்கட்டத்திற்கு ஏற்பவும் கதையின் அடர்த்திக்கு ஏற்பவும் தேவையான இடங்களில் இசையில் கதையின் கனத்தைக் கூட்டி இருக்கிறார் ராஜா. வேல்ராஜின் ஒளிப்பதிவு காடுகளையும் காலக்கட்டத்தையும் கண்முன் நிறுத்துகிறது.

‘விடுதலை1’
‘விடுதலை1’

படத்தில் காவல்துறையின் அதிகார கோர முகமும், மக்கள் மீதான அடக்குமுறையும் இயக்குநர் வெற்றிமாறனின் முந்தையப் படங்களான ’விசாரணை’, ’அசுரன்’ ஆகிய படங்களை சில இடங்களில் நினைவுபடுத்திச் செல்கிறது. நாவலை படமாக்கும் கலை ‘விடுதலை’ படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மீண்டும் கைகூடி இருக்கிறது.

முதல் பாதி மெதுவாகவே நகர்ந்து இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பாதியில் விறுவிறுப்படைகிறது. படம் முடியும்போது இரண்டாம் பாகத்தில் ‘வாத்தியாராக’ விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் காட்சிக்கு காட்சி அழுத்தமான வசனங்களில் உலுக்கி எடுக்கிறது. ஆகமொத்தத்தில் ‘விடுதலை’ இந்த வருடத்தின் மற்றுமொரு சிறந்த படைப்பாக பேசப்படலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in