‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா காட்டும் ஆர்வம்: வெற்றிமாறன் சொன்ன சுவாரசியத் தகவல்

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா காட்டும் ஆர்வம்: வெற்றிமாறன் சொன்ன சுவாரசியத் தகவல்

சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு பற்றியும், இதற்காக அவர் எடுத்துவரும் சிறப்புப் பயிற்சிகள் பற்றியும் விருது விழா மேடை ஒன்றில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதைகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுபவர் இயக்குநர் வெற்றிமாறன். மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலைத் தழுவி அவர் இயக்கிய ‘விசாரணை’, பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி அவர் இயக்கிய 'அசுரன்' ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்ததுடன் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றன. அடுத்து ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் ‘விடுதலை’ எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன்.

அந்த வரிசையில் இப்போது சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' குறுநாவலை, சூர்யாவின் நடிப்பில் திரை வடிவில் உருவாக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இதற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், விருது விழா மேடை ஒன்றில் இப்படம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்துள்ளார். "படம் பற்றி இந்த நிலையில் நான் பேசுவது அதிகம். ஏனெனில் இன்னும் படப்பிடிப்பைக்கூட நாங்கள் ஆரம்பிக்கவில்லை. இருந்தாலும் சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 'வாடிவாசல்' கதையைப் படமாக்குவது எந்த அளவுக்குச் சவாலாக இருக்கப்போகிறது என்பதைப் படக்குழுவினருக்கு உணர்த்தவும் நான் உணர்ந்துகொள்ளவும் தான் ஈ.சி.ஆரில் அந்த டெஸ்ட் ஷூட்டை இரண்டு நாட்கள் நடத்தினோம்.

இந்தப் படத்துக்காக சூர்யா ஒரு நாட்டு மாடும், காங்கேயம் மாடும் வாங்கி வளர்த்துக்கொண்டிருக்கிறார். அந்த இரண்டு மாடுகள்தான் படத்திலும் வர இருக்கின்றன. இப்போது சூர்யா வீட்டில் அந்த மாடுகள் வளர்ந்து பழகி வருகின்றன. இது மட்டுமல்லாமல், மாடுபிடி வீரர்களுடனும் சூர்யா அடிக்கடி பேசிவருகிறார். சீக்கிரம் படம் குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்” என்று பேசியிருக்கிறார் வெற்றிமாறன்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலாவின் படம், இந்தியில் 'சூரரைப் போற்று' படத்தின் ரீமேக்கில் கெளரவத் தோற்றம், மீண்டும் 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in