மிரட்டும் ஜிந்தா... மீண்டெழும் வெற்றிவேல்: சஸ்பென்ஸ் த்ரில்லர் ’வெற்றிவிழா’

’வெற்றி விழா’வில் சலீம் கெளஸ்
’வெற்றி விழா’வில் சலீம் கெளஸ்

’’அடுத்து என்ன செய்வது என்று புரிபடாமல் இருந்தேன். சிவாஜி பிலிம்ஸில் இருந்து அழைப்பு வந்தது. ’கமல் கால்ஷீட் கொடுக்கறாரு. கமலும் பிரபுவும் சேர்ந்து நடிக்கிறாங்க. அதுக்குத் தகுந்த கதையை ரெடி பண்ணுங்க. அதுக்கு முன்னால கமலைப் போய் பாத்துருங்க. அவர்தான் உங்க பேரைச் சொன்னார்’ என்று போன் வந்தது. எப்போதோ படித்த ஆங்கில நாவல் ஒன்று சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. அதில் இருந்து ‘நான் யார்’ என்பது தெரியாமல், அதைத் தெரிந்துகொள்ள ஒருவன் பயணப்படுகிறான்’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டேன். கமலைச் சந்தித்தேன். சம்மதித்தார். பத்து நாட்களில் திரைக்கதையை உருவாக்கினேன்’’ என்று மறைந்த நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன், ஒரு பேட்டியின்போது என்னிடம் சொன்னார்.

ராபர்ட் லுட்லும் எனும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ‘தி போர்ன் ஐடென்டிட்டி’ (The Bourne Identity) எனும் அந்நாவல், 1988-ல் டிவி சீரியலாக எடுக்கப்பட்டது. 2002-ல் தான் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்தப் படமும் அதன் அடுத்தடுத்த பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால், பிரதாப் போத்தன் அந்நாவலின் உட்கருவைத் தழுவி, ஹாலிவுட் திரையுலகை முந்திக்கொண்டு ‘வெற்றி விழா’ கண்டது தனிச்சிறப்பு!

அந்தப் படத்தைப் பற்றிப் பேசும்போது, ‘’நான் எடுத்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’க்கு சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை இளையராஜா சார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் ‘பண்ணலாம்’ என்று சிரித்தபடியே சம்மதித்தார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார்’’ என்று நன்றி மறக்காமல் பிரதாப் போத்தன் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

ஆக்‌ஷன் படம் எப்போதுமே ஒரு கொண்டாட்டம்தான். அதிலும் த்ரில்லரும் கலந்துவிட்டால், இன்னும் குஷியாக்கிவிடும். கொள்ளைக்கூட்டத்தைப் பிடிக்க, அந்தக் கூட்டத்துக்குள் நுழைபவன் உண்மையில் யார்? அவனும் கொள்ளையனா? காவல் துறையைச் சேர்ந்தவனா? இந்தக் குழப்பங்களுக்கு பின்னே பதில் வைத்து, திரைக்கதை முடிச்சுகளை சாமர்த்தியமாக அவிழ்த்துக்கொண்டே வந்ததுதான் ‘வெற்றி விழா’ படத்தின் வெற்றி ஃபார்முலா!

கமலைத் துரத்திக்கொண்டு பெரிய கூட்டமே வரும். அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து மயங்கி விழுந்திருப்பார் கமல். அவரை சசிகலாவும் செளகார் ஜானகியும் காப்பாற்றி அடைக்கலம் தருவார்கள்.

தான் யாரென்பதே கமலுக்குத் தெரியாது. கோவாவில் இருந்து சென்னைக்கு வந்தால், அந்த இடங்களெல்லாம் நினைவுக்கு வரும். ஆனால் அவர் பெயர் நினைவுக்கு வராது. ஒருசிலர் பார்த்துவிட்டு, ஸ்டீபன் ராஜ் என்பார்கள். இன்னொரு பக்கம்... வெற்றிவேல் என்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்களாக நினைவுக்கு வரும்.

இதேகட்டத்தில், சசிகலா கமலை விரும்புவார். வேறு வழியில்லாமல், கமலும் சசிகலாவும் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் பின்னர்தான் பழசெல்லாம் நினைவுக்கு வரும். கமலின் மனைவி அமலா. கமல் போலீஸ் அதிகாரி. ஒருகட்டத்தில், எதிரிகள் அமலாவைக் கொன்றுவிடுவார்கள். கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவன் ஜிந்தா என்பவன் என்பதை அறிந்த கமல், ஸ்டீபன் ராஜ் எனும் பெயரில், கொள்ளையனாகவே அங்கே நுழைவார். ஜிந்தாவின் நம்பிக்கையையும் பெறுவார்.

சிலர், கமலைப் பார்த்துவிட்டு, ‘ஸ்டீபன் ராஜ்’ என்று கூப்பிடுவார்கள். உடனே சசிகலா, ‘’நானும் கிறிஸ்டியன், நீங்களும் கிறிஸ்டியன்’’ என்று மகிழ்வார். “இதற்காக சந்தோஷப்பட்டுக்கொள்ளாதே. என் லாக்கரில் வெவ்வேறு பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் உள்ளன. அநேகமாக நான் கெட்டவன் போல” என்பார் கமல்.

’வெற்றி விழா’ ஆடியோ கேசட்
’வெற்றி விழா’ ஆடியோ கேசட்

இதனிடையே, சென்னைக்கு வந்திருக்கும் கமல்ஹாசனை, ஒருபக்கம் கொள்ளைக் கூட்டம் துரத்தும். இன்னொரு பக்கம் போலீஸ் துரத்தும். குழம்பித்தான் போவார் கமல். அப்போது போலீஸ் உயரதிகாரியின் நம்பருக்கு போன் செய்தால் உண்மை தெரியும் என்று டிஸ்கோ சாந்தி கமலுக்கு அட்வைஸ் சொல்லுவார். உயரதிகாரி ராதாரவியின் மூலமாகத்தான் மொத்த உண்மையும் கமலுக்குத் தெரியவரும். உண்மையான பெயர் வெற்றிவேல் என்றும் அமலா மனைவி என்றும் அவரை கொள்ளைக் கும்பல் கொன்றுவிட்டது என்றுமான தகவல்களைச் சொல்லுவார். கமலுக்கும் ஞாபகம் வந்துவிடும்.

இதையடுத்து, கொள்ளைக்கும்பல் துரத்தும்போது, மெல்லிசைக் குழு வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பிரபு மற்றும் குழுவினருடன் சேர்ந்துகொள்வார் கமல். பிரபுவும் குஷ்புவும் கணவன் - மனைவி. கமலும் பிரபுவும் நண்பராவார்கள்.

ஜிந்தாவுக்கும் போலிச் சாமியார் ஒருவருக்கும் தொடர்பு உண்டு எனும் உண்மையைத் தெரிந்துகொள்வார் கமல். ஜிந்தா எனும் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிகர் சலீம் கெளஸ் அறிமுகமான படம் இதுதான். போலிச் சாமியார் கேரக்டரில் ஜனகராஜ். சாமியாரைக் கொல்ல ஜிந்தா திட்டமிடுவார்.

அதில் சாமியார் ஜனகராஜைக் காப்பாற்றிவிடுவார் கமல். பின்னர் குஷ்புவையும் சசிகலாவையும் ஜிந்தா பிடித்து வைத்துக்கொள்ள, அவர்களைக் காப்பாற்றவும் வில்லன்களை அழிக்கவும் கமலும் பிரபுவும் செல்வார்கள். அழிப்பார்கள். காப்பாற்றி அழைத்துவருவார்கள். இப்படி படம் முழுக்கவே, ஏகப்பட்ட திருப்பங்கள். ஆனால் தெளிவான திரைக்கதையும் பக்காவான ஆக்‌ஷன் காட்சிகளும் படத்துக்கு ஹாலிவுட் படத்தின் வண்ணத்தைக் குழைத்துக் கொடுத்து பிரமிக்க வைத்திருக்கும்!

கே.ராஜேஷ்வரும் சண்முகப்ரியனும் கதை வசனம் எழுதினார்கள். பிரதாப் போத்தன் திரைக்கதை எழுதி இயக்கினார். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம் இது. கமல், அமலா, சசிகலா, பிரபு, குஷ்பு, ராதாரவி, அபிலாஷா, டிஸ்கோ சாந்தி, ஜனகராஜ், சின்னி ஜெயந்த், வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், மயில்சாமி, செளகார் ஜானகி முதலானோர் நடித்திருந்தார்கள்.

பிரதாப் போத்தன் இயக்கிய ’ஜீவா’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘ஆத்மா’ முதலான பல படங்களில் ஆக்‌ஷனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் வில்லன் மிரட்டியிருப்பார்.

கமலுடன் பிரதாப் போத்தன்
கமலுடன் பிரதாப் போத்தன்

சத்யராஜை வைத்து இவர் இயக்கிய ‘ஜீவா’ படத்திலும் வில்லன் அசத்தியிருப்பார். அந்தப் படத்தில், ‘பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம்’ என்று அடிக்கடி சொல்லுவார் வில்லன். இதில் ‘ஜிந்தா’ எனும் கேரக்டரில் சலீம் கெளஸ் அதகளம் பண்ணியிருப்பார். இவர் வருகிற காட்சிகளெல்லாம் கரவொலி எழுப்பும் அளவுக்கு வசனங்கள் எழுதப்பட்டிருக்கும். அவரும் புது மாடுலேஷனில் பேசியிருப்பார். ‘ஜி...ந்தா...’ என்று சொல்வதும் அழகாக இருக்கும். ‘ஸ்டீபன் ராஜ். எனக்கு விளையாடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும் ஸ்டீபன் ராஜ்’ என்று ஸ்டைலாகச் சொல்லுவார் சலீம் கெளஸ்.

கமல், அமலா ஜோடி, பாந்தமான ஜோடியாக பேசப்பட்டது. ஏற்கெனவே, ‘சத்யா’ படத்திலும் ‘பேசும்படம்’ படத்திலும் இருவரும் நடித்திருந்தார்கள். அதேபோல் பிரபு - குஷ்பு ஜோடியும் கொண்டாடப்பட்டது. கமலும் சசிகலாவும் இந்தப் படத்தில்தான் இணைந்தார்கள். சொல்லப்போனால் இந்த ஒரு படத்தில்தான் இணைந்து நடித்தார்கள்.

பிரதாப் படங்களுக்கு அசோக்குமாரின் ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்பெஷல் எப்போதுமே! அமர்க்களம் பண்ணியிருப்பார் அசோக்குமார். படம் முழுக்கவே கேமராவின் வண்ணங்களும் கோணங்களும் அசத்தலாக இருக்கும். சேஸிங் காட்சிகளில் மிரட்டியெடுத்திருப்பார்.

அமலாவுடன் ரொமான்ஸ், சசிகலாவுடன் கல்யாணம், வில்லன்களுடன் மோதல், டிஸ்கோ சாந்தியுடன் ஆட்டம், பிரபுவுடன் சேர்ந்து டான்ஸ் என்று படம் முழுக்கவே கமலின் முத்திரைகள் இளமையும் குறும்புமாக, தனக்கே உரிய ஸ்டைலுடன் இருக்கும்.

‘அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு வந்தது இந்தப் படம். வெற்றிவேல் எனும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அநாயசமாக நடித்திருந்தார். கமலின் காஸ்ட்யூம்களுக்கு ரொம்பவே கவனம் செலுத்தப்பட்டது.

இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. டைட்டிலில் ‘மாருகோ மாருகோ...’ என்று இளையராஜா கங்கை அமரனெல்லாம் சேர்ந்து மெலடியாகப் பாடியிருப்பார்கள். பின்னர் டைட்டில் முடிந்ததும், கதை எப்படிப்பட்டது என்பதை சஸ்பென்ஸ் பொடியைத் தூவியபடி நகர்த்திச் செல்வார் பிரதாப் போத்தன்.

கவிஞர் வாலியின் பாடல்களும் வரிகளும் ரசிக்கும் வகையில் இருந்தன. ‘பூங்காற்று உன் பேர் சொல்ல...’ என்ற பாடல் இன்றைக்கும் நம்மை மயக்கிப் போடுகிற மெலடி. இந்தப் பாடலில் கமலும் அழகு. அமலாவும் கொள்ளை அழகு. ‘மாருகோ மாருகோ’ எப்போதும் குதூகலப்படுத்துகிற குஷியான பாடல். இசையில் ஒரு துள்ளல் ஆரம்பம் முதல் நிறைவு வரை இருந்துகொண்டே இருக்கும்.

பிரபுவுக்காக, மலேசியா வாசுதேவன் குரலில் ‘சீவி சிணுக்கெடுத்து’ பாடல், இதுவும் ஒரு கச்சேரிக்கான அத்தனை வாத்தியக் கோர்ப்புகளுடன் படைத்திருப்பார் இளையராஜா. ’தத்தோம் தலாங்கு தத்தோம்’ என்ற பாடல், டிஸ்கோ ஸ்டைலில் பட்டையைக் கிளப்பியது. எஸ்பிபி-யும் மலேசியா வாசுதேவனும் இணைந்து பாடிய பாடல்... கமலும் பிரபுவும் இணைந்து ஆடிய பாடல்... ‘வானெமன்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு சொர்க்க லோகம் வந்தது’ பாட்டு மனதுக்குள் ஒரு போதையை, மயக்கத்தை உண்டுபண்ணும். படத்தின் ஆடியோ கேஸட்டுகளின் விற்பனை ஒரு லட்சத்தைத் தொட்டது ஒரு முக்கிய சாதனை!

1989 அக்டோபர்28-ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது ‘வெற்றி விழா’. கமலின் ஸ்டைலிஷான படங்களின் வரிசையில், இன்றைக்கும் ‘வெற்றி விழா’ தனித்துவத்துடன் இருக்கிறது. படம் வெளியாகி, 33 ஆண்டுகளானாலும் கமல், பிரபு வெற்றிக் கூட்டணியின் ‘வெற்றிவிழா’வை, பிரதாப் போத்தன் எனும் அற்புதமான படைப்பாளியின் ‘வெற்றிவிழா’வை இன்னமும் ரசித்தபடியேதான் இருக்கிறோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in