’பிரியாணி சாப்பிடத்தான் ஆசை, கூழ் தானே கிடைக்கிறது’: சீமான் பேச்சு

’பிரியாணி சாப்பிடத்தான் ஆசை, கூழ் தானே கிடைக்கிறது’: சீமான் பேச்சு

எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் ‘ஜீவி-2’. விஜே கோபிநாத் இயக்கியுள்ளார். வெற்றி, அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் 19 ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பி ராமையா, சீனுராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், சீமான் பேசும்போது கூறியதாவது:

வெற்றி,  அஸ்வினி
வெற்றி, அஸ்வினி

ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென, அவர்கள் நினைத்ததற்காகவே பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகாவிட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில்தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம். தியேட்டர்களில் வெளியானதா? என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி

தம்பி சுரேஷ் காமாட்சி, சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ, நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன். சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in