பழம்பெரும் மராத்தி நடிகர் விக்ரம் கோகலே காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

பழம்பெரும் மராத்தி நடிகர் விக்ரம் கோகலே காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

தேசிய விருது பெற்ற பழம்பெரும் மராத்தி நடிகர் விக்ரம் கோகலே காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

1971-ம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பர்வானா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் விக்ரம் கோகலே. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘அனுமடி’ (Anumati) மராத்தி படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல், ‘ஆகாத்’ என்ற படம் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்தவர், அண்மையில் இந்தியில் வெளியான ‘நிகம்மா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயதான விக்ரம் கோகலே வயது மூப்பின் காரணமாக உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இதனை உறுதிப்படுத்தியுள்ள மருத்துவமனை நிர்வாகம், “பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக பிரபல நடிகர் விக்ரம் கோகலே காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளது.

இதனிடையே, நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “விக்ரம் கோகலே படைப்பாற்றல் கொண்ட பன்முக நடிகர். அவரது நீண்ட கால நடிப்பு பயணத்தில் அவர் நடித்த பல சுவாரஸ்யமான பாத்திரங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in