நடிகர் இன்னொசென்ட்: 10 ஆண்டுக்கும் மேலான மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

நடிகர் இன்னொசென்ட்
நடிகர் இன்னொசென்ட்

மலையாள சினிமாவின் முதுபெரும் நடிகரான இன்னொசென்ட் தனது மரணத்துடனான 10 ஆண்டுக்கும் மேலான போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

திரையுலகில் 750க்கும் மேலான திரைப்படங்கள், வார்டு கவுன்சிலர் முதல் எம்பி வரை மக்கள் பணியில் பங்களிப்பு, நூலாசிரியர், நகைச்சுவை முதல் குணச்சித்திரம் வரை பன்முகம் கொண்டவர் மற்றும் சுமார் 11 ஆண்டுகளாக இன்முகத்துடன் தனது மரணத்துக்கு எதிராக போராடி வந்தவர் இன்னொசென்ட். 75 வயதாகும் இவர் நேற்றிரவு மரணத்துடனான போராட்டத்தை நிறைவு செய்தவராக, மலையாள சினிமா உலகினரை பரிதவிக்க விட்டு விடைபெற்றிருக்கிறார்.

திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் பிறந்த இன்னொசென்ட், 1972இல் ’நிருதாசாலா’ திரைப்படத்தின் வாயிலாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அண்மையில் வெளியான பிருத்விராஜின் ’கடுவா’ திரைப்படம் உட்பட தென்னக மொழிகளின் 750க்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார். ’லேசா லேசா’ உட்பட சில தமிழ்ப் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். ’பாசுவும் ஆல்புத்த விளக்கும்’ என்ற இவரது கடைசி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், மலையாள திரையுலகினரை தவிக்க விட்டு மறைந்துள்ளார்.

1979இல் வார்டு கவுன்சிலர், 2004இல் எம்பி என்று சுயேட்சையாக நின்று மக்கள் பணியிலும் ஆர்வம் காட்டிய இன்னொசென்ட், மலையாள திரைக்கலைஞர்களின் பிரத்யேக அமைப்பான ‘அம்மா’வின் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். 2012இல் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர், அதனுடனான தனது போராட்டத்தை நகைச்சுவையும், அவலமும் தெறிக்க சுவாரசியமானபுத்தகமாகவும் எழுதி உள்ளார். இதற்கிடையே கரோனா தொற்று தொடர்பான பாதிப்புகள் மற்றும் பல்வேறு உடலுறுப்புகள் செயல்பாடு குன்றியது தொடர்பாக 3 வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றிரவு மரணமடைந்திருக்கிறார். இந்திய சினிமாவின் பல்வேறு ஆளுமைகள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in