வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’

இயக்குநர் வெங்கட் பிரபு
இயக்குநர் வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்துக்கு ‘மன்மத லீலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் இயக்கிய படம் ’மாநாடு’. சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த, இந்தப் படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

‘டைம் லூப்’ வகை கதையை கொண்ட இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, வெங்கட் பிரபு அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதற்கிடையே, ஆரவாரம் ஏதுமின்றி அசோக் செல்வன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி முடித்துவிட்டார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ’மன்மதலீலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.

படம் பற்றி வெங்கட் பிரபு கூறும்போது, “கரோனா பொதுமுடக்க நேரத்தில் நானும் உதவி இயக்குநர் மணிவண்ணனும் கதை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது சுவாரசியமான ஒரு கரு கிடைத்தது. அதை மேம்படுத்துமாறு சொன்னேன். அப்படி உருவான கதைதான் இது. பொதுமுடக்க காலகட்டத்தில் எல்லோரும் த்ரில்லர் அல்லது தீவிரக் கதைகள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் ஜாலியான கதையை உருவாக்கினோம். 80-களில் வெளியான பாக்யராஜ் படங்கள் மாதிரி, அதாவது ’சின்ன வீடு’ பாணியில், இந்தத் தலைமுறையை மனதில் வைது ஒரு படம் பண்ண நினைத்தோம். அப்படி உருவானதுதான் இந்தப் படம். இதன் திரைக்கதை புதுமையாக இருக்கும்” என்றார்.

’மாநாடு’ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே, இதன் படப்பிடிப்பையும் நடத்திவிட்டதாகக் கூறியிருக்கும் வெங்கட் பிரபு, “இந்தப் படத்தை ஓடிடி-க்காக உருவாக்கலாம் என முதலில் நினைத்தோம். படத்தைப் பார்த்த சிலர், திரையரங்குகளில் வெளியிடலாம் என்றனர். அதன்படி திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.

சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in