வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!

வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!

நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ‘கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் படத்தை தயாரிக்க இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
எங்களிடம் கூறிய அதே கதையை ‘வெந்து தணிந்தது காடு’ என்ற பெயரில் படமாக எடுத்து, நாளை வெளியிட இருக்கிறார்கள். எங்களுக்குத் தரவேண்டிய இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக் கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன், ‘2018-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி, ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தைத் திருப்பி வழங்கிவிடுவதாகவும், இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

சமரசம் செய்துகொள்ள மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பணத்தைத் திருப்பிக் கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்யும்படி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

கடைசி நேரத்தில் படத்துக்கான தடை விலகியதால் சிம்பு மற்றும் கவுதம் மேனன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in