வசந்தமுல்லை -பட விமர்சனம்

வசந்தமுல்லை
வசந்தமுல்லை பட விமர்சனம்

வேலை அழுத்தம், மல்டி டாஸ்க்கிங், சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டும் என ஒருவன் தூக்கம் கெட்டு வாழ்க்கை பின்னே ஓடும்போது என்ன ஆகும் என்பதுதான் 'வசந்தமுல்லை'.

ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ருத்ரன் (சிம்ஹா), புராஜெக்ட் ஒன்றை 150 நாட்களுக்குள் முடித்துத்தர தானாக முன்வந்து கமிட் ஆகிறார். இதை வெற்றிகரமாக முடித்துத் தந்தால் நல்ல போஸ்டிங், சம்பளம் கிடைக்கும் என்ற ஆசை அவரை ஒருபக்கம் நெட்டித் தள்ளுகிறது. இன்னொரு பக்கம் வேலை தரும் அழுத்தம் என தூக்கம் தொலைந்து தடுமாறுகிறார். அதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு அழுத்தத்தை அதிகரிக்க, மருத்துவர் அறிவுரைப்படி பணியிலிருந்து பிரேக் எடுத்து, தன் காதலி நிலாவோடு (காஷ்மீர பர்தேஸி) ட்ரிப் செல்கிறார்.

அங்கு அவர் தங்கும் 'வசந்த முல்லை' ஹோட்டலில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் டைம் லூப்பில் சிக்குகிறார் ருத்ரன். எதனால் இது ஏற்படுகிறது, யார் அவரை இதில் சிக்க வைத்தது, கடைசியில் என்ன ஆனது... என்று சிறிய ட்விஸ்ட்களோடு 'வசந்த முல்லை' படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா.

'வசந்தமுல்லை'
'வசந்தமுல்லை'

ருத்ரனாக தூக்கம் தொலைத்து, டைம் லூப்பில் சிக்கி, அதில் இருந்து முடிச்சவிழ்க்க போராடும் கதையின் நாயகனாக, அந்தக் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார் சிம்ஹா. கதை முழுக்க பயணிக்கும் நாயகி கதாபாத்திரத்தில் காஷ்மீரா. அழகுக்கு அப்பால் நடிப்பில் கொஞ்சம் தேர்ச்சி தேவை. நாயகன் மற்றும் நாயகியை சுற்றியே பெரும்பாலும் நகர்வதால், அங்கங்கு வந்து போகும் நடிகர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை.

அப்படி குறைவான நேரம் என்றபோதும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் டைம் லூப்பில் பயணிக்கும் கதையை சிக்கலில்லாமல் நகர்த்த உதவியிருக்கிறது.

'வசந்தமுல்லை'
'வசந்தமுல்லை'

லூப்பில் சிக்கும் கதையும் அதற்கான காரணமும் அவிழும் இடத்தில், சின்னச் சின்ன ட்விஸ்ட்கள் ஆரம்பத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. ஆனால் அடுத்து வருவது எளிதில் கணிக்கக்கூடியதாகவே அமைந்திருப்பது, கதையின் வேகத்தை குறைக்கிறது. வலிந்து திணிக்கப்பட்ட சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள் துருத்திக் கொண்டிருப்பதும் மைனஸ்.

ஆக மொத்தத்தில், தற்கால இளைஞர்கள் மத்தியில் தென்படும் அதிகப்படி வேலை அழுத்தம், மல்டி டாஸ்க்கிங் தடுமாற்றங்கள் உள்ளிட்டவற்றால் நேரும் விளைவுகளை, டைம் லூப் களத்தில் வித்தியாசமாக பரிமாறியதில் கவனிக்க வைக்கிறது 'வசந்த முல்லை'.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in